குழந்தையை தரதரவென தரையில் போட்டு அடித்தார்… பிரபல சீரியல் நடிகை புகார்!

  • IndiaGlitz, [Saturday,May 13 2023]

இந்தி தொலைக்காட்சியில் பிரபல நடிகையாக இருந்துவரும் சந்திரிகா சாஹா என்பவர் தனது 15 மாதக் குழந்தையை கணவரே தரையில் இழுத்துப்போட்டு மூன்று முறை அடித்தார் என்று பரபரப்பு புகார் அளித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தி தொலைக்காட்சியில் சிஐடி, அதாலத் போன்ற தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சந்திரிகா சாஹா. தற்போது 41 வயதாகும் இவர் முதல் திருமணம் தோல்வியில் முடிவடைந்த நிலையில் விவாகரத்துப் பெற்றுள்ளார். பின்பு இளம் தொழிலதிபர் அமன் மிஸ்ரா என்பவரோடு பழகிவந்த நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் 21 வயதே ஆன அமன் மிஸ்ரா மூலம் சந்திரிகா கர்ப்பம் அடைந்த நிலையில் அதை அமன் மிஸ்ராவே கலைக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். ஆனால் குழந்தையைப் பெற்றெடுத்த வளர்த்துவந்த நிலையில் கடந்த மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனாலும் குழந்தை மீது பற்றில்லாத அமன் மிஸ்ரா எப்போதும் குழந்தையிடம் கடுகடுப்புடன் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மே 5 ஆம் தேதி சமையல் அறையில் இருந்த சந்திரிகா குழந்தையைப் பார்த்துக் கொள்ளுமாறு தனது கணவரிடம் கூறியிருக்கிறார். ஆனால் குழந்தை திடீரென்று அழுததை தொடர்ந்து ஓடிவந்து பார்த்த சந்திரிகா குழந்தையின் உடலில் காயங்கள் ஏற்பட்டதை அறிந்து மலாடு பகுதியிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக கணவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சந்திரிகா ஒரு கட்டத்தில் சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து தனது கணவர் 15 மாதக் குழந்தையை தரதரவென தரையில் இழுத்துப்போட்டு 3 முறை தாக்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து பங்கூர் காவல் நிலையத்தில் நடிகை சந்திரிகா புகார் அளித்த நிலையில் போலீஸார் தற்போது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.