பேலியோ டயட்டை பின்பற்றுவது எப்படி? எளிய வழிமுறை!

  • IndiaGlitz, [Wednesday,June 23 2021]

நாகரிக சமூகம் உருவாவதற்கு முன்பு வரை மனிதர்கள் வேட்டையாடியே உணவுகளை உண்டு வாழ்ந்து வந்துள்ளனர். அந்த அடிப்படையில் நிறைய மாமிசங்களையும் குறைந்த அளவு காய்கறி மற்றும் பழங்களையும் உண்டு வந்தனர். அப்படியான ஒரு பழைய உணவுப் பழகத்தைக் கொண்டு இருப்பதுதான் இந்த பேலியோ டயட்.

இந்த டயட் முறையைப் பின்பற்றும்போது மனித உடலுக்குத் தேவையான ஆற்றலும் கிடைக்கிறது. கூடவே நோய் தொற்றில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் ஆரோக்யமான வாழ்க்கைக்கும் இது உதவுகிறது. இந்த பேலியோ டயட் உணவுமுறையைப் பயன்படுத்தி தற்போது பலரும் உடல் எடையைக் குறைத்து வருகின்றனர். மேலும் இந்த உணவு முறையினால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைந்து போவதும் உறுதிச் செய்யப்பட்டு உள்ளது.

வழிமுறை- சாதாரணமாக ஒரு நபருக்கு தினமும் 2000-2500 கலோரி தேவைப்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த பேலியோ டயட்டில் கலோரி அளவுகளைக் கணக்குப் பார்த்து உட்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

அரிசி, கோதுமை தானியங்களைத் தவிர்த்து நல்ல கொழுப்பு அடங்கிய முட்டை, மீன், இறைச்சி, விதைகள், கொட்டைகள் போன்றவற்றை உண்பதே பேலியோ டயட். இது ஆரோக்கியமான உணவு முறை என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

முட்டை, இறைச்சி போன்றவற்றை வயிறு நிரம்பும்வரை சாப்பிடலாம். வயிறு நிரம்பியதும் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.

பேலியோ டயட்டில் கொழுப்பே பிரதானமான எரிபொருள். கொழுப்பு நிறைந்த இறைச்சியே நல்லது. அதனால் குறைவான தோல் நீக்கப்பட்ட சிக்கனைத் தவிர்த்து கொழுப்புடன் சேர்ந்த உணவுகளையே உண்ண வேண்டும்.

உணவுகளை எண்ணெயில் பொறிப்பதைத் தவிர்த்து வேகவைத்தோ, கிரில் செய்தோ, அவன் அல்லது வானலியில் சமைத்தோ சாப்பிடலாம்.

சமையலில் நெய், வெண்ணெய், ஹைட்ரோ ஜனேட் செய்யப்படாத செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில், வெண்ணெய், நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டியது- கடலை எண்ணெய், சூரியகாந்தி, ரைஸ்பிரான், கடுகு எண்ணெய், பருத்திக் கொட்டை எண்ணெய், வனஸ்பதி ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மேலும் இது வாழ்நாள் முழுவதிற்குமான உணவு முறை என்பதால் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று கடைப்பிடிப்பது நல்லது. காரணம் இந்த டயட் முறையைப் பின்பற்றும் சிலருக்கு முதல் வாரத்தில் சிரமம் ஏற்படலாம். எனவே இந்த முறையைப் பின்பற்றும் அனைவரும் ரத்தப் பரிசோதனையைச் செய்து கொள்ள வேண்டியது முக்கியம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதோடு காபி,டீ போன்றவற்றை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இந்த பேலியோ டயட் செட் ஆவதற்கு கூடுதல் காலம் எடுத்துக் கொள்ளலாம். மேலும் இந்த டயட் முறையில் அதிகளவு நீர் அருந்த வேண்டும். அப்படி நீர் அருந்துவதைத் தவிர்க்கும்போது டிஹைடிரேஷன் பிரச்சனைகள் ஏற்படும்.

காலை உணவு- 100 கிராம் பாதாம் கொட்டைகள், பாதாமை வானலியில் வறுத்து அல்லது நீரில் 12 மணிநேரம் ஊறவிட்டு உண்பது சிறந்தது. பாதாம் விலை அதிகம் என நினைப்பவர்கள் அதற்குப் பதிலாக திபெத்திய பட்டர் டீ உட்கொள்ளலாம்.

மதிய உணவு- நான்கு முட்டை அதுவும் மஞ்சள் கருவுடன் உட்கொள்ள வேண்டும். இந்த முட்டையை ஆம்லெட் ஆஃப்பாயில் என எப்படி வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

மாலை சிற்றுண்டி- ஒரு கிளாஸ் பால் அருந்த வேண்டும். கால் கிலோ அளவிலான பேலியோ காய்கறிகளை சேர்க்க வேண்டும். காய்கறிகளை சாலட் அல்லது வானலியில் நெய் விட்டு வறுத்துச் சாப்பிடலாம்.

இரவு உணவு- இறைச்சி, மீன், தோலுடன் உள்ள கோழி போன்றவற்றை வயிறு நிறைய சாப்பிடலாம்.

சைவ உணவுக்காராகள் இந்த பேலியோ டயட்டில் காலை, மாலை உணவுகளை அப்படியே பின்பற்ற வேண்டும். இரவு உணவுக்கு பதிலாக பனீர் வகை உணவுகளை எடுத்துக கொள்ளலாம்.

பேலியோவில் தவிர்க்க வேண்டிய இறைச்சி வகைகள்- கொழுப்பு அகற்றப்பட்ட இறைச்சி வகைகள் தவிர்க்கப்பட வேண்டும். தோல் அகற்றப்பட்ட கோழி மற்றும் தோல் அகற்றப்பட்ட மீன் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

துரித உணவகங்களில் கிடைக்கும் எண்ணெயில் பொறிக்கப்பட்ட ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட இறைச்சி உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

கருவாடு மிதமான அளவுகளில் விரும்பும்போது உண்ணலாம். முட்டையின்வெள்ளைப் பகுதியை மட்டும் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.

பேலியோ டயட் கூடுதல் விலை கொண்ட உணவுப் பழக்கமாக இருந்தாலும் இந்த உணவுமுறையைப் பின்பற்றி தற்போது பலரும் உடல் எடையைக் குறைத்து வருகின்றனர்.