வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த ”இரும்பு பெண்மணி” ஜெ.ஜெயலலிதா
- IndiaGlitz, [Monday,February 24 2020]
எவ்வளவோ தலைவர்கள் வந்திருக்கிறார்கள், சென்றிருக்கிறார்கள். ஆனால் அரசியல் வரலாற்றில் ஒரு தலைவரின் இறுமாப்பை, தடாலடியை ரசித்துப் பார்க்க முடியும் என்றால் அது உறுதியாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடம் மட்டுமே பார்க்க முடிகிறது. தன்னை அடக்க நினைத்த கூட்டங்களுக்கு மத்தியில் ஒரு அசைக்க முடியாத ஆளுமையாகத் தன்னை வளர்த்து கொண்டவர். எந்த ஒரு சூழலிலும் தன்னை வீழ்த்த ஒருவர் கிளம்பி விட்டால் எப்படி கையாள்வது என்று சதா ஒரு தேர்ந்த ஒரு அரசியல் சாணாக்கியராகவே திகழ்ந்தவர் என்றால் அது மிகையாகாது.
திருச்சி மாவட்டம் திருவரங்கம் தான் இவருக்கு சொந்த ஊர். ஆனால் பிறந்தது கர்நாடகாவில். ஜெயராம் , சந்தியா (வேதம்) தம்பதியினருக்கு பிப்ரவரி 24, 1948 இல் பிறந்தார். இயற்பெயர் கோமள வல்லி என்றாலும் அம்மு என்றுதான் செல்லமாக அழைக்கப் பட்டு இருக்கிறார். பெங்களூர் பிஷப் கார்டன் மெட்ரிக்குலேஷன் பின்பு கான்வெண்ட் படிப்பு என பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்தின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். மிகுந்த சுட்டித் தனத்துடன் சுறுசுறுப்பாகவே வளர்ந்து வந்திருக்கிறார்.
படிப்பு, நடனம், கர்நாடக இசை என ஒரே நேரத்தில் அனைத்தையும் கற்றுக் கொண்ட திறமைப் படைத்தவராக தனது இளமை காலத்தை கழித்திருக்கிறார். தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் எனப் பல மொழிகளையும் கற்றுக் கொண்டிருந்தார். இசையிலும் நாட்டியத்திலும் வல்லமை பெற்றிருந்தார். பள்ளியில் ஆங்கில நாடகத்தில் முதன் முதலில் நடிக்க ஆரம்பித்தார். சித்தி வித்தியா சினிமா படங்களில் நடிக்க ஆரம்பித்தவுடன் ஜெயலலிதாவின் அம்மா வேதாவும் (சந்தியா) அத்துறையில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னாளில் வேதாவின் பெயரைக் குறிப்பதற்காகவே போயஸ் தோட்டம் (வேதா இல்லம்) என பெயர் மாற்றப் பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
அம்மாவின் வற்புறுத்தலுக்காவே சினிமாவில் இணைந்து நடித்ததாக இவரது வரலாற்றை குறித்து பலர் கருத்து தெரிவிக்கின்றனர். குமுதத்தில் தனது வாழ்க்கைத் தொடரை குறித்து எழுதும்போதும் எனக்கு கல்லூரியில் சேர்ந்து படிக்கத் தான் விருப்பம். ஒரு தேர்ந்த சட்ட வல்லுநராக ஆக வேண்டும் என்றே விரும்பினேன். எனது வாழ்நாளில் நான் விரும்பியது எப்போதுமே கிடைக்கவில்லை என ஆதங்கத்துடனே பதிவு செய்கிறார். இப்படி சினிமாவில் ஆரம்பித்த இவரது வாழ்க்கை ஒரு தேர்ந்த நடிகையாகவே வளர்த்தெடுக்கிறது. முதல் முதலில் சினிமாவில் ஸ்ரீசைலம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கிறார். பின்னர் கன்னடத்தில் சின்னத கொம்பே என்ற படத்தில் கல்யாண் குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
தமிழில் இவர் காதாநாயகியாக நடித்த “வெண்ணிற ஆடை” பெரு வாய்ப்பைத் தேடித் தருகிறது. தன்னிகரற்ற நடிகையாக ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலமாக அறியப்படுகிறார். எம்.ஜி.ஆருடன் சேர்ந்து 28 படங்களில் நடித்திருக்கிறார். தனது தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்து ஜெயலலிதா எப்போதும் உலகத்தின் பார்வையில் இருந்து மறைந்து வாழ்ந்ததாகவே பலர் கருதுகின்றனர். ஆனால் “நான் சீதையோ, சாவித்திரியோ இல்லை” என சோபன் பாபுவுடன் இணைந்து வாழ்ந்த வாழ்ககையை தெளிவாகவே ஒரு காலத்தில் குறிப்பிட்டுள்ளார். 1978 இல் ஜெயலலிதா, குமுதம் வாரப் பத்திரிக்கைக்கு தொடர்ந்து 22 வாரங்கள் தனது சொந்த அனுபவத்தைக் குறித்து பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
சுறுசுறுப்பு, தேர்ந்த ஞானம் போன்றவற்றால் எம்.ஜி.ஆரின் மனதில் குடிகொண்டு விட்ட ஜெயலலிதா அதிகமான படங்களை அவருடனே நடித்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஒட்டுமொத்த சினிமா அனுபவத்தில் 125 படங்களை நடித்திருக்கிறார். நதியைத் தேடி வந்த கடல் படமே அவரது கடைசி படாமாக இருந்தது. ரஜினியுடன் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி பின்பு நிராகரித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
சினிமா துறையில் ஒரு தேர்ந்த நடிகையாகத் தன்னை வளர்த்துக் கொண்டுவிட்ட ஜெயலலிதா தனது இன்னொரு அத்தியாத்தை எழுத்தில் இருந்துதான் தொடங்குகிறார். ஜெயலலிதா ஒரு தேர்ந்த வாசகியும் கூட. புகழ்பெற்ற ஆங்கில நாவல்களையும் அரசியல் எழுத்துக்களையும் தேர்வு செய்து படிக்கும் பழக்கத்தை தனது வாழ்நாள் முழுவதும் இதைத் தொடர்ந்திருக்கிறார். அப்படித்தான் பத்திரிகைகளுக்கு நாடகம், கதை, கட்டுரை போன்றவற்றை எழுதியிருக்கிறார். அவரது எழுத்துக்கள் ஒரு புகழ்பெற்ற நடிகையினுடையது என்பதால் தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
எம்.ஜி.ஆர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து மோதல்களால் 1972 இல் தனிக் கட்சி தொடங்குகிறார். அதிமுக என்ற பெயரில் தொடங்கிய கட்சி 1977 இல் ஆட்சியைப் பிடிக்கிறது. எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்துக்கு அதிகளவு நிதிச் சுமை ஏற்படுகிறது. இந்த நிதிச்சுமையை சமாளிக்க மக்களிடம் நிதி திரட்டி திட்டத்தைத் தொடர வேண்டும் என்று முடிவெடுக்கிறார் எம்.ஜி.ஆர். தான் முதலமைச்சர் என்பதால் மக்களிடம் நேரடியாக சென்று நிதி கேட்க இயலாது என்பதால் மக்களிடம் மிகவும் பரிச்சயமான ஒரு முகத்தைத் தேடுகின்றனர். இப்படி எம்.ஜி.ஆரின் அரசியல் பாதையில் ஒரு தேர்ந்த அறிஞராகத்தான் முதலில் அழைக்கப் படுகிறார்.
சத்துணவுத் திட்டம் என்ற பெயரில் எப்படி ஒரு நடிகை பள்ளிகளில் சென்று உணவை சோதனை செய்யலாம் என்று திமுக கேள்வி எழுப்புகிறது. உடனே சத்துணவு திட்டத்தின் உயர்மட்ட குழுவின் இயக்குநராக எம்.ஜி.ஆரால் பதவி உயர்வு பெறுகிறார்.
ஜெயலலிதா பின்பு கொள்கைப் பரப்பு செயலாளராக அறிவிக்கப் படுகிறார். திமுகவினர் ஜெயலலிதாவின் செயல்பாட்டினைக் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். கட்சிக்குள்ளும் இவரது வரவை ஏற்றுக்கொள்ளாத சூழல் உருவாகிறது. இத்தனையும் கடந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் நிலைமைக்கு உயர்த்தப் படுகிறார்.
எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் கட்சி இரண்டாக உடைகிறது. ஜெயலலிதா, ஜானகி என இரண்டாக கட்சி பிளவுபடுகிறது. ஆர்.எம். வீரப்பன் ஆதரவுடன் ஜானகி 97 சட்ட மன்ற வேட்பாளர்கள் ஓட்டுப் போட்டதால் முதலமைச்சர் ஆகிறார். ஆனால், வாக்கெடுப்பின் போது எழுந்த பலத்த வன்முறையை காரணம் காட்டி ஆட்சி கலைப்பு செய்யப் படுகிறது. பின்பு 1989 இல் தேர்தல். ஆனால் இரட்டை சிலை சின்னம் முடக்கப் படுகிறது.
ஜானகி கட்சியில் இருந்து விலகி கொண்டதால் பிளவு பட்ட கட்சியை ஒன்றாக இணைக்கிறார். மேலும் இரட்டை இலை சின்னத்தை மீட்கிறார் ஜெயலலிதா. கட்சிக்கு பொதுச்செயலாளர் ஆகவும் அறிவிக்கப் படுகிறார்.
அரசியலில் ஆரம்பக் கட்டம்
தனித்த கம்பீரமாக நாம் பார்த்த மனுசி ஒரு காலத்தில் திரையில் கவர்ச்சிக் கன்னியாகவும் இருந்திருக்கிறார். அவரே இன்னொரு காலத்தில் தேர்ந்த அரசியல் வலிமை மிக்கவராகத் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.
திமுக சட்டசபையில் ஜெயலலிதா மீது அநாகரிகமாக முறையில் பேச்சுகளையும் செயல்களையும் கட்டவிழ்த்து விட்டதாக இன்றைக்கும் குற்றச் சாட்டுகள் இருந்து வருகின்றன. அதுவும் ஒருவகையில் உண்மையாகத்தான் இருந்திருக்கிறது. பெண் என்பதால் மட்டுமே பல முறை கடும் அவமானத்திற்கு ஆளாகியிருக்கிறார் ஜெயலலிதா. சட்டசபையை விட்டு பலமுறை தலைவிரி கோலாமாகவே வெளிவந்த ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை இந்தத் தருணத்தில் தான் அடுத்தக் கட்டத்திற்கு நகர்கிறது. இனிமேல் முதலமைச்சராக மட்டுமே சட்ட சபைக்குள் வருவேன் என்று சொன்னவர் அதற்குபின்பு முதலமைச்சராகத்தான் சட்டசபைக்குள் நுழைந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
கோமளவல்லி ”விட்டால் நாட்டுக்கு ஜெயலலிதா கூட முதல்வர் ஆகிவிடுவார் போலிருக்கிறது” என்று ஒருமுறை முரசொலி மாறன் விளையாட்டாக கூறினார். அது கடைசியில் உண்மையாக மாறிவிட்டது.
சர்க்காரியா கமிட்டியையே தனது ஆட்சிகாலத்தில் எம்.ஜி.ஆர் மிகப் பெரிய ஆயுதமாக பயன்படுத்தினார். அவரை தொடர்ந்து ஜெயலலிதாவும் இதையே பின்பற்றியிருக்கிறார். விடுதலை புலிகள் நுழைவு, சட்டம் ஒழுங்கு பாதிப்பு போன்ற குறைபாடுகளை காரணம் காட்டி 1990 இல் கருணாநிதி ஆட்சி கலைக்கப் படுகிறது.
இதைப் பயன்படுத்திக் கொண்ட ஜெயலலிதா 1991 இல் முதல் முதலாக ஆட்சியை அமைக்கிறார். இவர் போட்ட அஸ்திவாரம் பின்னர் அதிமுகவின் வளர்ச்சிக்கு உறுதியாக அமைந்துவிட்டது எனலாம்.
எம்ஜிஆரின் இறப்புக்குப் பின்னர் அதிமுக காணாமல் போய்விடும் என்று சொல்லப் பட்ட நிலையில் ஆட்சியைப் பிடித்து முதல் முறையாக சட்டமன்றத்தில் கால் எடுத்து வைத்தார் ஜெயலலிதா. தனது ஆட்சிக் காலத்தில் பல கட்சிகளுடன் கூட்டணி, பின்னர் விலகல், ஓட்டு பிரிந்து விடும் என்ற நோக்கில் சில கட்சிகளுடன் கூட்டணி என்று ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக திறமையாக கட்சியையும் ஆட்சியையும் வளர்த்து வந்திருக்கிறார்.
ஜெயலலிதா மீது வைக்கப் படும் குற்றச்சாட்டுகள்
அவதூறு வழக்குகள் போடுவதில் இவரது அரசு தேர்ந்து வல்லமை படைத்தது என்றும் அரசின் புகழ்பாடும் பத்திரிகைகள் மட்டுமே அன்றைக்கு இயல்பாக செயல்பட முடியும் என்ற கருத்துக்கள் நிலவியது. ஜனநாயகக் குரல் நசுக்கப் படும் கருத்துரிமை பறிக்கப்படும் போன்ற சூழல் இவரது ஆட்சியில் நிலவியதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன.
இவரது ஆட்சியில் சாதி அமைப்புக்கெதிரான எந்த குரலையும் எழுப்பவில்லை என்றும் அதே நேரத்தில் சாதி ஓட்டுக்களை அழகாக கணித்து வெற்றிப் பெறுவதில் ஒரு தேர்ந்த ராஜ தந்திரியாக செயல் பட்டார் என்றும் விமர்சிக்கப் பட்டு இருக்கிறார். திமுக முன்னெடுக்கும் திட்டங்களுககு மூடுவிழா, ஒருவரின் ஆட்சிக் காலத்தில் அதிகமாக அவதூறு வழக்குகள் போடப்படும் என்றால் அது இவரது ஆட்சிக்காலத்தில் தான் எனவும் கடுமையாக விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறார்.
டாஸ்மாக் திட்டத்தை ஒழிக்க முயற்சித்த இவரது அரசு படிப்படியாக டாஸ்மாக்கை அரசாங்கமே எடுத்து நடத்தும் என்று கூறி மோசமான நிலைக்குத் தமிழகத்தை தள்ளியிருக்கிறது எனவும் குற்றச் சாட்டு எழுந்தது. மன்னார் குடி குடும்பத்தினருக்கு ஜெயலலிதா கொடுத்த அதிகப் படியான முக்கியத்துவத்தால் சொத்துக் குவிப்பு வழக்கு, அதிகார துஷபிரயோகம் போன்றவை ஏற்பட்டதாகவும் விமர்சிக்கப் பட்டது.
பெண்களுக்கான சட்டம்
1 ரூபாய் சம்பளம், காவிரி பிரச்சனை உண்ணாவிரதம் தொட்டில் குழந்தை திட்டம் என்று தனது ஆட்சிக் காலத்தில் மக்கள் அலையைத் தன் பக்கம் திருப்பியதில் ஜெயலலிதாவுக்கு அதிக இடமுண்டு.
வாஜ்பாயின் அரசியலில் அச்சாணியாக விளங்கியவர் திடீரென்று தனது ஆதரவை விலக்கிக் கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். 2014 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒரு புதிய வரலாற்றையை எழுத ஆயத்தமானது. நாளைய பிரதமர் ஜெயலலிதா என்றே அறிவிக்கப் பட்டார். இது மோடி அலை வீசிக்கொண்டிருந்த நேரத்தில் தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது.
மோடியா! லேடியா! அலை இந்தியா முழுக்க அவரை திரும்பி பார்க்க வைத்தது.
அரசியல் ஆலோசகரான துக்ளக் மத்திய அமைச்சரவையில் ஜெயலலிதா இடம்பெறுவார் என்றே குறிப்பிட்டார். ஆனால் பா.ஜ.க அறுதிப்பெரும்பான்மை வெற்றிப் பெற்று அமைச்சரவையை அமைத்தது. ஆனாலும் ஜெயலலிதாவின் மத்திய அமைச்சரவையுடன் மிகவும் நெருக்கம் காட்டியே வந்தார்.
பிரதமர் மோடி தனது பாதுகாவலையும் மீறி ஜெயலலிதாவின் வீட்டுக்கே வந்து உணவு அருந்தும் அளவுக்கு மத்திய அமைச்சரவையுடன் தொடர்ந்து வலிமையுடன் வைத்துக் கொண்டிருந்தவர் இவர் ஒருவர் மட்டுமே. சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப் பட்ட போதுதான் மக்களவை துணை சபாநாயகர் பதவி தம்பித் துரைக்கு கிடைத்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த சட்ட உதவியால் சொத்து குவிப்பு வழக்கை குறித்து விசாரணை செய்வதற்கு அமைக்கப் பட்ட நீதிபதிகளின் குழுவையும் மாற்றி அமைத்ததாகவும் குற்றச் சாட்டு எழுந்தது குறிப்பிடத் தக்கது.
காவிரி வழக்கின் வெற்றி- காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு வெளியிட தயங்கிக் கொண்டிருந்த வேளையில் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று வெற்றி பெற்று அதை அரசிதழில் வெளியிட செய்தார். அமமா உணவகம், அம்மா குடிநீர், விலையில்லா அரிசி, கிரைண்டர், மிக்சி திட்டம் போன்றவை குறிப்பிடத் தக்க செல்வாக்கை பெற்று தந்தது.
இதுவரை எந்த அரசியல் தலைவரையும் குறித்து நாவல் எதுவும் எழுதப்படவில்லை. ஆனால் ஜெயலலிதா குறித்து The Queen என்கிற நாவலை அனிதா என்பவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.
அரசியல் சாணாக்கியம்
எந்த ஒரு தலைவரும் தனது ஆட்சி நிலைப்புத் தன்மைக்கு எதிரானவற்றை விரும்ப மாட்டார்கள். ஆனால் எந்த ஒரு சக்தியும் ஜெயலலிதாவிடம் எதிரியாக நிற்க முடியாத அளவிற்கு மிகுந்த வல்லமைப் பெற்றவராகவும் அரசியல் சாணாக்கியத் தனம் மிக்கவராகவும் அரசியலில் செயல்பட்டார் என்பதே உண்மை.
தனது பிரதான எதிர்கட்சியாக எப்போதும் திமுகவை எதிர்த்து வந்த ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் கொள்கைகளை அப்படியே கடைப்பிடிக்கிறார். தமிழகத்தில் 16 ஆண்டுகள் ஆட்சி செலுத்தியிருந்தாலும் மத்தியில் ஒரு காலக் கட்டத்தில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுக்கிறார். தான் கூட்டணி வைத்த அதே பா.ஜ.க. ஆட்சிக் கலைப்பிற்கும் காரணமாகிறார். இந்தியாவில் ஒரு தலைவர் எடுத்த முடிவால் மத்தியில் ஆட்சி கலைக்கப் பட்டு புதிய தேர்தல் வருகிறது. அதில் மோடியா? லேடியா என்று பிரம்மாண்டமான இந்திய அரசியல் தலைமைக்கே சவால் விடும் அளவிற்கு ஒரு மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்கிறார்.
தனது ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு பாதிப்பு வரும் என்று நினைத்த மத்திய அரசின் எந்தவொரு திட்டத்துக்கும் அவர் ஒருபோதும் ஒப்புதல் அளிக்க வில்லை என்பதே அவரின் மிகப் பெரிய சாதனையாக இருந்தது. சரக்கு சேவை வரி, NEET க்கு எதிரான குரல், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் எதிர்ப்பு என்று தொடர்ந்து பாரா முகத்தையே மத்தியில் காட்டி வந்திருக்கிறார். மேலும், மாநில சுயாட்சி குறித்து பேசிய முதல் தலைவராகவும் ஜெயலலிதா இருந்திருக்கிறார். மத்தியில் தான் கொண்டிருந்த வலிமையை பயன்படுத்தி 69 % இடஒதுக்கீட்டுக்கு சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
அரசியல் ஆளுமையில் எவ்வளவோ விமர்சனத்தையும், அச்சுறுத்தல்களையும் சந்தித்த ஒரு தலைவர் என்றைக்கும் மக்கள் மனதில் நின்று நிலைப்பதற்கு அவரின் ஆளுமையும் புலமையுமே காரணமாக இருக்கிறது.
பழுத்த அரசியல் வாதியான கருணாநிதியையே தனது எதிரியாக வைத்துக்கொண்டு பல இடங்களில் அவரது ஆளுமையால் வென்றும் காட்டினார். பிரமிப்பு, ஆக்ரோஷம், ஆளுமை, அரசியல் நுணுக்கம் ஒரே இடத்தில் குடிகொண்டு இருந்தது என்றால் இந்திய அரசியலில் அது ஜெயலலிதாவிடம் மட்டுமே என்றால் அது மிகையாகாது.