150 மில்லியன் டாலர்களை வழங்கி கொரோனா தடுப்பூசி ஆய்வுக்கு அழைப்பு விடுக்கும் பில் கேட்ஸின் அறக்கட்டளை!!!

உலகின் பெரிய பணக்காரராக இருந்துவரும் பில் கேட்ஸின் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை கொரோனா தடுப்பு மருந்துகளுக்கான ஆய்விற்கு பெருந்தொகையை நன்கொடையாக வழங்கியிருக்கிறது. இந்த அறக்கட்டளை 150 மில்லியன் டாலர்களை வழங்கி கொரோனா சிகிச்சை மற்றும் புதிய சிகிச்சை முறைகளை பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள உலகிலுள்ள விஞ்ஞானிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

கொரோனா தடுப்பு மருந்திற்காக உலக நாடுகள் பல ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்காவில் ஒரு நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்கள்மீது பரிசோதித்தும் இருக்கிறது. இந்நிலையில் அந்த மருந்து எந்த அளவிற்கு பயனை அளிக்கும் என்ற தகவல் குறித்து வெளியுலகிற்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை. சீனாவிலும் இதுபோன்ற ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவல் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது.

இந்நிலையில் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை உலக மக்களின் பாதுகாப்புக்காக கொரோன தடுப்பூசிகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெரும் அளவிலான நிதியை வழங்கியிருக்கிறது.  உலகிலுள்ள 7 பில்லியன் மக்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளைத் தயாரித்து கொடுக்க வேண்டும் என்பதே இந்த நிதி ஒதுக்கீட்டிற்கான காரணம் என்று அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி மார்க் சுஸ்மான் தெரிவித்து இருக்கிறார். கொரோனா தடுப்பூசி, பரிசோதனைகளுக்கு சுமார் 18 மாதங்கள் ஆகலாம் என்றாலும் பெரிய வணிகங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இதைத் தொடங்கலாம் என்று பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை அழைப்பு விடுத்திருக்கிறது.

முன்னதாக கொரோனா நோய்த்தொற்றை எதிர்த்துப்போராடும சர்வதேச முயற்சிகளுக்கு உதவும் வகையில் பில் கேட்ஸ் 100 மில்லியன் டாலர்களை வழங்கினார். தற்போது கொரோனா தடுப்பூசி ஆய்வுகளுக்காக 150 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் போது மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவக் கட்டமைப்பு இல்லாத தெற்காசிய நாடுகளுக்கு உதவும் வகையில் பல செயல்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். ஆனால் கொரோனா பரவலைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் மருத்துவம், தடுப்பூசி போன்ற ஆய்வுகள் தற்போது உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி மார்க் சுஸ்மான் வலியுறுத்தியுள்ளார்.