முன்னணி நடிகைக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ்! காரணம் இதுதான்…
- IndiaGlitz, [Thursday,January 28 2021]
தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை தமன்னாவுக்கு கேரள உயர்நீதிமன்றம் சம்மன் மனு அனுப்பி இருக்கிறது. காரணம் இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் விளம்பரத் தூதராக இருக்கிறார். இவரோடு சேர்ந்து இந்தியக் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, மலையாள நடிகர் அஜு வர்கீஸ் ஆகியோரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு விளம்பரத் தூதர்களாக செயல்பட்டு வருகின்றனர். இந்த விளையாட்டை தடை விதிக்குமாறு கோரப்பட்ட வழக்கில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் பல ஆன்லைன் விளையாட்டுகள் மிகவும் பிரபலமாகின. அந்த வகையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டும் இளைஞர்கள் மத்தியில் பட்டையை கிளப்பியது. ஆனால் இந்த விளையாட்டிற்கு பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அடிமையாகியும் வந்தனர். சிலர் லட்சக்கணக்கான பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளை மாநில அரசுகளே தடை செய்யவும் ஆரம்பித்தன.
இந்நிலையில் கேரளாவில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யுமாறு திருச்சூர் பகுதியைச் சேர்ந்த பாலி வடக்கன் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உள்ளார். மேலும் இந்த விளையாட்டிற்கு விளம்பர தூதரர்களாக செயல்பட்டு வரும் நட்சத்திரங்களே இளைஞர்களுக்குத் தவறான முன்னுதாரணமாக செயல்பட்டு வருகின்றனர் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு கேரள விளம்பரத்தாரர்களாக செயல்பட்டு வரும் நடிகை தமன்னா, இந்தியக் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, நடிகர் அஜு வர்கீஸ் போன்றோருக்கு கேரள உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.மேலும் இந்த விளையாட்டை தடை செய்யாமல் இருப்பதற்கு விளக்கம் கேட்டு கேரள அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.