ஒரு டெபிட் கார்டை வைத்து லட்சக்கணக்கில் நூதனக் கொள்ளை… சென்னையை கலங்கடித்த சம்பவம்!
- IndiaGlitz, [Thursday,June 24 2021]
சென்னையில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் டெபிட் கார்டை வைத்து யாருக்கும் தெரியாத வகையில் கிட்டத்தட்ட ரூ.45 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை வடபழனி, கீழ்ப்பாக்கம், விருகம்பாக்கம், வேளச்சேரி, விஜயாநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் நுழைந்த கொள்ளைக் கும்பல் குறிப்பிட்ட ஏடிஎம் மெஷின்களை மட்டும் குறிவைத்து இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். அதோடு உடனே மாட்டிக் கொள்ளாதவாறு வெகு நூதனமாகத் திருடியிருப்பதும் தற்போது போலீசாரை வியக்க வைத்து இருக்கிறது.
இதுவரை எஸ்பிஐ வங்கிக்கான ஏடிஎம் மெஷின்கள் இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட ஒரு ஏடிஎம் மெஷினில் உள்ள குட்டி தவறை இந்தக் கொள்ளைக் கும்பல் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர். அதாவது டெபிட் கார்டை எஸ்பிஐ ஏடிஎம் மெஷினுக்குள் போட்டு பணத்தை எடுக்கும் இந்தக் கொள்ளைக் கும்பல், பணம் வெளியே வந்தவுடன் அதை எடுத்துக் கொண்டு அதன் வாயை சிறிது நேரத்திற்கு அப்படியே பிடித்து வைத்துக் கொண்டு இருக்கின்றனர்.
இதனால் ஜப்பான் நாட்டு நிறுவனம் தயாரித்த எஸ்பிஐ ஏடிஎம் மெஷின் வாடிக்கையாளர் பணத்தை எடுக்கத் தவறிவிட்டார் என சென்சார் செய்து அவரின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை கழித்துக் கொள்ளாதவாறு வங்கிக்கு செய்தி அனுப்பி விடுமாம். அதாவது ஜப்பான் நாட்டு நிறுவனம் தயாரித்த எஸ்பிஐ ஏடிஎம் மெஷின் 20 நிமிடங்களைக் கடந்து வாடிக்கையாளர் தங்களது பணத்தை எடுக்காதபோது அதை வரவு கணக்கிலேயே வைத்துக் கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இந்த சென்சார் விஷயத்தை தெரிந்து கொண்ட ஹரியாணா கும்பல் ஒன்று சென்னையில் கடந்த ஜுன் 18 – 19 ஆம் தேதிக்குள் 14 இடங்களில் கிட்டத்தட்ட ரூ.45 லட்சம் பணத்தைக் கொள்ளை அடித்துள்ளனர். மேலும் இந்தக் கும்பல் பெரியமேட்டில் மட்டும் 190 முறை டெபிட் கார்டை பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்டு உள்ளது தெரியவந்துள்ளது. இதனால 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் சென்னையில் மட்டும் ரூ.1 கோடி பணத்தைக் கொள்ளை அடித்து இருக்கலாம் என நம்பப்படுகிறது.
தற்போது ஹரியாணாவைச் சேர்ந்த அமீர் என்பவரை கைதுசெய்த தனிப்படை போலீசார் அவருடைய கூட்டாளிகள் 3 பேரை சுற்றி வளைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தக் கொள்ளை கும்பல் சென்னை போலவே பல மாநிலங்களில் தங்களது கைவரிசையை காட்டி இருக்கலாம் என்றும் போலீசார் தகவல் கூறுகின்றனர்.