உத்திர பிரதேச சட்ட சபைக்கு கேஸ் சிலிண்டருடன் வந்த சமாஜ் வாதி எம்எல்ஏ க்கள்
- IndiaGlitz, [Friday,February 14 2020]
உத்திரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது அம்மாநில சட்ட மன்ற உறுப்பினர் அனைவரும் சட்ட மன்றக் கூட்டத் தொடரில் பங்கு பெற்று வளர்ச்சி நிலைமைகள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். வரும் செவ்வாய் கிழமையன்று உத்திரப்பிரதேசத்தின் பட்ஜெட் தாக்கல் செய்யப் பட உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. நேற்றைய கூட்டத் தொடரில் ஆளுநர் ஆனந்தி படேல் உரை நிகழ்த்த இருந்தார். ஆளுநரை உரை நிகழ்த்த விடாமல் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது சட்ட சபையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்றைய கூட்டத் தொடர் ஆரம்பித்தவுடன் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் சட்ட சபைக்கு கேஸ் சிலிண்டர்களுடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விலை வாசி உயர்வு, கேஸ் விலை உயர்வு, குடியுரிமை சட்டத் திருத்த மசோதா போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் சட்ட சபையின் நடுப்பகுதிக்கே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்ட சபைக்கு வெளியே காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விலை வாசி உயர்வைக் கண்டித்து பதாகைகளை ஏந்திக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பட்ஜெட் தாக்கல் செய்யப் படுவதற்கு முன்பே எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அம்மாநிலத்தில் தற்போது விவாதப் பொருளாகி இருக்கிறது. எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி கட்சியினரும் காங்கிரஸ் கட்சியினரும் சபையை நடக்க விடாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது இருக்கையில் இருந்தவாறே பார்த்துக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
நாட்டில் பெரும் சட்ட மன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கிற உத்திரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி, காங்கிரஸ் என்ற இருபெரும் எதிர்க்கட்சியினரை எதிர்த்து பா.ஜ.க செல்வாக்கு செலுத்தி வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் மக்கள் மத்தியில் என்ன எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று பல அரசியல் ஆர்வலர்கள் எதிர்ப் பார்ப்புக் கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.