தன்னை தானே தனிமை படுத்திகொண்ட மணிரத்னத்தின் மகன்

  • IndiaGlitz, [Sunday,March 22 2020]


உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா Covid-19 (novel வைரஸ் ஒருவரது உடலில் 14 நாட்கள் வரையிலும் தங்கிவாழும் தன்மைக் கொண்டது. எனவே, பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பியவர்களை இந்திய சுகாதாரத்துறை குறைந்தது 14 நாட்களுக்கு தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறது. வைரஸ் அறிகுறி இருப்பவர்களை சுகாரதாரத்துறை தனது நேரடிக் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்தும் வருகிறது.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள், வைரஸ் அறிகுறிகளோடு இல்லாவிட்டாலும் தங்களைத் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ளுதல் அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக நடிகை சுஹாசினி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். சுஹாசினியின் மகன் நந்தன் லண்டனிலிருந்து கடந்த 18 ஆம் தேதி இந்தியா திரும்பியுள்ளார். அவர் வந்ததிலிருந்து தனியறையில் வைத்து தனிமைப்படுத்தப் பட்டுள்ளார். உணவு முதற்கொண்டு எதற்காகவும் வெளியே வராதபடி கடுமையான பாதுகாப்புடன் தனிமைப்படுத்தப் பட்டு இருக்கிறார். வைரஸ் அறிகுறி எதுவும் இல்லாவிட்டாலும் வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்தவர்கள் ஒவ்வொருவரும் இப்படி தங்களைத் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இது நோய் பரவாமல் தடுப்பதற்கு ஒரு சிறந்த வழிமுறை எனத் தனது வீடியோவில் தெரிவித்து இருக்கிறார்.

 நடிகை சுஹாசினி வெளியிட்ட இந்த விழிப்புணர்வு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.