தமிழகத்தில் முதல் முறையாக திருநங்கைகள் நடத்தும் உணவகம்… மக்கள் மத்தியில் வரவேற்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கோவை ஆர்எஸ் புரத்தில் திருநங்கைகள் ஒன்று சேர்ந்து உணவகம் ஒன்றை ஆரம்பித்து இருக்கின்றனர். இந்த முயற்சிக்கு பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் திருநங்கைகளே இணைந்து நடத்தும் முதல் உணவகமும் இதுதான் என்பதும் மேலும் விறுவிறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. “கோவை டிரான்ஸ் கிட்சன்’‘ என்று பெயரிடப்பட்ட இந்த உணவகத்திற்கு தற்போது பலரும் வந்து செல்வது பெரும் மகிழ்ச்சியை தருவதாகவும் திருநங்கைகள் கூறியுள்ளனர்.
கொரோனா தாக்கத்தால் திருநங்கைகள் பலரும் தங்களது வேலை வாய்ப்புகளை இழந்து தவித்து வந்ததாகவும் அப்போது தாங்களே ஒரு உணவகத்தை தொடங்கி நடத்த வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதாகவும் கோவை மாவட்ட திருநங்கைகள் சங்கத் தலைவர் சங்கீதா குறிப்பிடுகிறார். இதனால் சொந்தமாக தொழில் தொடங்கி அதில் வருமானம் கிடைப்பதோடு சமூகத்தில் மேலும் மதிப்பும் மரியாதையும் கூடும் எனவும் அவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
திருநங்கைகள் சங்கத்தில் இருந்த 10 பேர் இணைந்து இந்த உணவகத்தைத் தொடங்கி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும் கொரோனா நேரத்தில் தாங்கள் ஆரம்பித்த இந்த உணவகத்தில் தயாரிப்பு முற்கொண்டு டெலிவரி வரை அனைத்து வசதிகளையும் இவர்களே செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பல நேரங்களில் தள்ளுவண்டி, உணவகம், ஹாஸ்டல் போன்ற பகுதிகளில் பணியாற்றிய திருநங்கைகள் தற்போது சொந்தமாக ஒரு உணவகத்தை தொடங்கி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவிட்டனர். இவர்களது முயற்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து இருப்பதால் மேலும் ஒரு உணவகத்தை தொடங்க இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments