மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நடக்கும் தேதி… வெளியான பரபரப்பு தகவல்!
- IndiaGlitz, [Monday,June 07 2021] Sports News
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் செப்டம்பர் 19 தொடங்கி அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் மீதமுள்ள 31 ஐபிஎல் போட்டிகளையும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
அபுதாபி, துபாய், ஷார்ஷா ஆகிய இடங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறலாம் எனவும் இதுதொடர்பாக இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் 25 நாட்களில் மீதமுள்ள 31 போட்டிகளை பிசிசிஐ நடத்த திட்டமிட்டு இருக்கிறது. அதோடு இதில் விளையாடிவரும் வெளிநாட்டு வீரர்களை போட்டிக்கு அழைத்து வருவது தொடர்பாகவும் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.
முன்னதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநர் ஆஷ்லி ஜைல்ஸ் எங்கள் நாட்டு வீரர்களை ஐபிஎல் போட்டிக்கு அனுப்ப முடியாது எனத் தெரிவித்து இருந்தார். காரணம் ஆஷஸ் போட்டிக்கு தயாராக வேண்டி இருக்கிறது எனவும் அவர் தெரிவித்து இருந்தார். இதேபோல மற்ற நாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை என்றால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யவும் பிசிசிஐ முனைப்பு காட்டி வருகிறது.
ஐபிஎல் போட்டியின் 14 ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி கோலாகலாமாகத் துவங்கியது. இந்த சீசனில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், ஐதராபாத் அணி வீரர் விர்த்திமான் சஹா, டெல்லி அணியின் அமித் மிஷ்ராவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து 2021 ஐபிஎல் மேட்சை ஒத்தி வைப்பதாக அதன் தலைவர் கங்குலி அறிவித்தார்.
அதோடு இந்த மேட்ச் ஒத்தி வைக்கப்பட்டதால் பிசிசிஐக்கு ரூ.2,000 கோடி நஷ்டம் ஏற்படும் எனவும் கங்குலி தெரிவித்து இருந்தார். இந்த நஷ்டத்தை ஈடுகட்டவே கொரோனா நேரத்தில் பிசிசிஐ தீவிரம் காட்டுகிறது எனப் பலரும் விமர்சனம் வைத்து வருகின்றனர்.
இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதல் இடத்தையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாம் இடத்தையும் பெற்று இருக்கிறது. மீதமுள்ள 31 போட்டிகள் நடந்து முடியும்போது வெற்றிக்கோப்பை யாருக்கு என்பதும் முடிவாகும்.