ரயில் தண்டவாளத்திலேயே தூங்கி 2 ஆவது நாளாகத் தொடரும் விவசாயிகளின் போராட்டம்…
- IndiaGlitz, [Friday,September 25 2020]
மத்திய அரசு சில தினங்களுக்குமுன் விவசாயத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்தச் சட்டத்திருத்தம் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளும் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு பல மாநிலங்களில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ரயில் மறியல் போராட்டங்கள் பல இடங்களில் தீவிரம் அடைந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.
இதனால் அம்மாநிலத்தின் நூற்றுக்கணக்கான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கிசான் மஸ்தூர் சங்கஷ் கமிட்டி எனும் விசாயிகள் அமைப்பு அமிதசரஸ் பகுதியில் ரயில்களை மறித்து போராட்டத்தை தொடங்குவதாக நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்போது அமிதசரஸ் பகுதியில் ரயில்வே தண்டவாளங்களிலேயே இரவு முழுவதும் தூங்கிப் பின், போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர் எனப் பரபரப்பு தகவல் வெளியாகி இருககிறது.
இதில் அமைப்பின் தலைவர் ரயில் தண்டவாளத்தில் சிறிய மேடு ஒன்றை அமைத்து விவசாயிகளுடன் திருத்த மசோதா குறித்து உரையாற்றி வருகிறார். அதை மற்ற விவசாயிகள் கேட்கின்றனர். இப்படியே 2 ஆவது நாளாகப் போராட்டம் தீவிரம் அடைந்திருக்கிறது. இந்த அமைப்பை தவிர அம்மாநிலத்தின் பல விவசாய அமைப்புகள் இந்த மாத இறுதிவரை காலவரையற்ற போராட்டத்தை தொடரப் போவதாகவும் அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றனர். இதனால் அமிதரஸ் பகுதியில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளதகாவும் கூறப்படுகிறது.