மகளின் கிரிக்கெட் ஆசையை பூர்த்தி செய்த ஒரு ரியல் 'கனா' தந்தை
- IndiaGlitz, [Monday,December 31 2018]
சமீபத்தில் வெளியான 'கனா' திரைப்படத்தில் மகள் ஐஸ்வர்யா ராஜேஷின் கிரிக்கெட் கனவை நனவாக்க தந்தை சத்யராஜ் பல தியாகங்கள் செய்வார். அதேபோல் ஒரு தந்தை தனது சொத்துக்களை விற்று மகளின் கிரிக்கெட் கனவு நிறைவேற ஒரு மைதானத்தையே விலைக்கு வாங்கிய செய்தி தற்போது வெளிவந்துள்ளது.
ஜெய்ப்பூரில் கிளார்க் வேலை பார்த்து வந்த சுரேந்திரா என்பவரின் மகள் பிரியா புனியா கிரிக்கெட் விளையாட ஆசைப்பட்டார். அவரை டெல்லியில் உள்ள அகாடமியில் பயிற்சிக்காக சுரேந்திரா சேர்க்க சென்றபோது அகாடமி அவரை சேர்த்து கொள்ள மறுத்துவிட்டது.
இதனையடுத்து மகளின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்த சுரேந்திரா தன்னிடம் உள்ள சேமிப்பு, மற்றும் சொத்துக்களை விற்ற பணத்தில் ஜெய்ப்பூரில் 22 லட்சம் மதிப்பில் ஒரு சொந்த மைதானத்தையே வாங்கி மகளுக்கு பயிற்சி கொடுத்தார்.
இந்த பயிற்சியின் பலனால் பிரியா புனியா கடந்த 2015ஆம் ஆண்டு முதல் முறையாக தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி முதல் போட்டியிலேயே 42 பந்துகளில் 95 ரன்களை எடுத்து அசத்தினார். அதேபோல் இந்திய ஏ அணியில் தேர்வாகி நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி 59 ரன்கள் எடுத்தார்.
மேலும் இந்திய மகளிர் அணியிலும் தேர்வு பெற்று சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியிலும் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.