காவிரிக்காக போராடி மெரீனாவில் கைதானாவர்கள் யார்? போலீசார் தீவிர விசாரணை

  • IndiaGlitz, [Saturday,March 31 2018]

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஆளுங்கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் பொதுமக்களும், மாணவர்களூம், இளைஞர்களும் மத்திய அரசு மீது கடும் ஆத்திரத்தில் இருப்பதால் எந்த நேரத்திலும் மெரினாவில் மீண்டும் ஒரு ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெறும் சூழல் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல்கள் வந்துள்ளது.

இந்த நிலையில் இன்று மாலை சுமார் 30 பேர் சமூக வலைத்தளங்கள் மூலம் இணைந்து திடீரென காவிரி குறித்த பதாகைகளை கையில் ஏந்தி மெரினாவில் போராட்டத்தை தொடங்கினர். ஜல்லிக்கட்டு போராட்டமும் இப்படித்தான் குறைந்த அளவில் ஆரம்பித்து பின்னர் பிரமாண்டமாக மாறியது. இதனால் மீண்டும் ஒரு மெரினா போராட்டம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு விழிப்புடன் இருந்து வருகின்றனர்.

மேலும் சமூக வலைத்தளம் மூலம் இணைந்து போராட்டம் செய்த பெண்கள் உள்பட 30 பேர்களையும் கைது செய்த போலீசார் அவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் உண்மையிலேயே சமூக வலைத்தளம் மூலம் இணைந்து போராட்டத்திற்கு வந்தவர்கள் தானா? அல்லது ஏதேனும் அமைப்பை சேர்ந்தவர்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.;