ஒருதலை பட்சமான சர்வே- குளறுபடியால் கேள்விகுறியாகி இருக்கும் நம்பகத்தன்மை!
- IndiaGlitz, [Tuesday,March 23 2021]
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி பல்வேறு நிறுவனங்களால் கருத்துக் கணிப்புகள் நடத்தப் படுகின்றன. அப்படி நடத்தப்படும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பெருவாரியான தொகுதி, இடம் மற்றும் வாக்காளர்களைத் தேர்வு செய்து நடத்தப்படுகிறது. இப்படியான ஒரு கருத்துக் கணிப்பை கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜனநாயகத்தின் குரல் எனும் அமைப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு இருந்தது.
இந்தக் கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணி 122 தொகுதிகளில் வெற்றிப்பெற்று தமிழகத்தில் 3 ஆவது முறையாக ஆட்சி அமைக்கும் எனத் தெரிவித்து இருந்தது. அதேபோல திமுக கூட்டணி 111 இடங்களில் மட்டும் வெற்றிபெறும் எனவும் கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழகத்தின் முன்னணி தனியார் தொலைக்காட்சி நிறுவனமாகச் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம் தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து ஒரு சர்வே எடுத்து இருக்கிறது.
அந்தச் சர்வேயில் 5 மண்டலமாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு தொகுதி, அந்த ஒரு தொகுதியில் கிட்டத்தட்ட 10 இடங்கள் என வெறும் 5,000 வேட்பாளர்களிடம் மட்டுமே கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. 6 கோடியே 29 லட்சத்து 23 ஆயிரத்து 512 வாக்காளர்களைக் கொண்ட தமிழகத்தில் இதுபோன்ற ஒரு கருத்துக்கணிப்பு முழுமையான முடிவினை தருமா என்பதுதான் தற்போது பெருத்த சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.
மேலும் இந்நிறுவனம் வழங்கி இருக்கும் தேர்தல் முடிவுகளின் சாதக பாதகத்தை குறித்து கருத்துத் தெரிவித்து இருக்கும் சில அரசியல் விமர்சகள் இதுபோன்ற கருத்துக் கணிப்புகளை முழுமையான ஒன்றாக எடுத்துக் கொள்ள முடியாது எனத் தெரிவித்து உள்ளனர். அதோடு இந்த சர்வேயில் முதல்வர் வேட்பாளராக அரசியலை விட்டு விலகிய சசிகலாவின் பெயரும் இடம்பெற்று இருக்கிறது.
இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் கருத்துக் கணிப்புகளைக் குறித்து சந்தேகம் எழுப்பி இருக்கும் அரசியல் விமர்சகர்கள் இதன் புள்ளி விவரத்தையும், நேரம் மற்றும் கேள்விகளையும் குறித்து விமர்சனம் எழுப்பி உள்ளனர். மேலும் இதுபோன்ற கருத்துக் கணிப்புகள் பத்திரிக்கை சுதந்திரத்தை கேள்விக்குரியாக்கி மக்களிடம் இருக்கும் நம்பகத்தன்மையையும் கெடுத்து விடும் என எச்சரித்து உள்ளனர்.