கொரோனா; ஆபத்தான நகரங்களில் ஒன்று சென்னை!!! இலங்கை சுகாதாரத்துறை அறிவிப்பு!!!
- IndiaGlitz, [Monday,March 30 2020]
கொரோனா பரவலைத் தடுக்க இலங்கை அரசு பல தடுப்பு நடவடிக்ககைளை எடுத்து வருகிறது. கொரோனா பாதிப்புள்ள ஒரு கிராமத்தை முற்றிலும் தனிமைப்படுத்தி இராணுவப் பாதுகாப்புடன் வைத்திருப்பது முதற்கொண்டு அந்நாட்டில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கொரோனா பாதித்த நாடுகள் மற்றும் நகரங்கள் பட்டியலையும் இலங்கை அரசு தயாரித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த பட்டியலில் உள்ள நாடுகள் மற்றும் நகரங்களில் இருந்து திரும்பியவர்கள் தற்போது இலங்கையில் தனிமைப்படுத்தப் பட்டு வருகின்றனர்.
சென்ற வாரத்தின் தொடக்கத்தில் சென்னையில் இருந்து இலங்கைக்கு சென்ற 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை இலங்கை சுகாதாரத் துறை கண்டுபிடித்தது. மேலும் இந்த வாரத்தில் சென்னையில் இருந்து திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதிப்படுத்திய இலங்கை அரசாங்கம் கடுமையான பாதிப்புள்ள நகரங்களில் பட்டியலில் சென்னையையும் சேர்த்துக் கொண்டிருக்கிறது.
எனவே, கடந்த 14 நாட்களில் சென்னை சென்று திரும்பியவர்களின் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் தற்போது இலங்கை சுகாதாரத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கடந்த 14 நாட்களில் சென்னையில் இருந்து இலங்கைக்கு திரும்பியவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது விவரங்களை கொடுக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டிருக்கிறது. இதுவரை சென்னையில் இருந்து இலங்கை திரும்பிய 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இலங்கை அரசு இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் இதுவரை 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. மேலும், கொரோனா நோய்த்தொற்றினால் முதல் மரணமும் நிகழ்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.