பெரும்பாலான மக்களின் உணவு பூச்சிகள்தான்… பதற வைக்கும் வடகொரியாவின் உண்மை முகம்!!!
- IndiaGlitz, [Saturday,September 05 2020]
வடகொரியாவில் இருந்து தப்பி பல நெருக்கடிக்குப்பின் நியூயார்க்கில் வாழ்ந்து வரும் ஒரு இளம்பெண் வடகொரியாவின் கோர முகத்தை தற்போது வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். அவர் பெயர் யியோன்மி பார்க். வடகொரியாவில் தனது 13 வயதுவரை ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றியும் அங்கு தனது குடும்பம் பட்ட அவலத்தையும் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்ட பார்க் வடகொரியாவில் தற்போது நடந்து வரும் அவலமான ஆட்சி அதிகாரத்தைக் குறித்தும் கருத்துக் கூறியிருக்கிறார்.
பார்க் வடகொரியாவில் 13 வயதுவரை மட்டுமே வாழ்ந்திருக்கிறார். “அங்கு இருந்த காலகட்டம் வரைக்கும் நான் பூச்சிகளைத்தான் உண்டு வந்தேன். அங்கு பெரும்பாலான மக்களின் அன்றாட உணவாக வெறும் பூச்சிகள் மட்டும்தான் இருக்கும். மற்ற நாடுகளில் உள்ள நகர அமைப்புகளை எல்லாம் வடகொரியாவில் பார்க்க முடியாது. வீடுகள் எல்லாம் சேரிகளைப் போலத்தான் காட்சி அளிக்கும். மக்கள் பெரும்பாலும் புரதச் சத்துக்காக பூச்சிகளைத்தான் நம்பியிருக்கின்றனர். அதுவும் கிடைக்காவிட்டால் நிலைமை திண்டாட்டம்தான்.
மேலும் பள்ளி, கல்லூகளில் காதல் என்ற அடையாளத்தைக்கூட பார்க்க முடியாது. வடகொரியாவில் மின்சாரம்கூட அரசாங்கத்தின் பொதுச்சொத்தாக இருக்காது. மக்கள் இன்றளவும் நெருக்கடியான நிலைமையில்தான் அங்கு வாழ்ந்து வருகின்றனர். தெருக்களில் எங்குப் பார்த்தாலும் கேட்பாரற்ற சடலங்கள் நிரம்பி வழியும்” என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் பார்க்.
வடகொரியாவைப் பற்றி ஐக்கிய நாடுகள் சபையும் அவ்வபோது எதிர்மறையான கருத்துகளை தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. வடகொரியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 43% பேர் நாளொன்றுக்கு ஒருவேளை உணவை மட்டுமே சாப்பிடுகின்றனர் என ஐ.நா சுட்டிக் காட்டியிருக்கிறது. ஆனால் அதிபரான கிம் ஜாங் உன்னின் நிர்வாகம் கோடி கணக்கான டாலர்கள் செலவு செய்து அணுஆயுதம் தயாரிக்க முனைப்பு காட்டுவதாகவும் ஐ.நா. குற்றம் சாட்டியிருந்தது.
சமீபத்தில் கொரோனா தாக்கத்தால் வடகொரியாவில் ஏற்பட்ட உணவுத் தட்டுப்பாட்டை போக்க பொதுமக்கள் அனைவரும் செல்லப் பிராணிகளை ஒப்படைக்க வேண்டும் என்று அதிபர் உத்தரவிட்டு இருந்தார். இந்தத் தகவலைக் கேட்டு உலகநாடுகள் கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தின. அந்தளவிற்கு நெருக்கடியான நிலையில்தான் தற்போது வடகொரியா இருந்து வருகிறது. ஆனால் அணுஆயுத சோதனையை மட்டும் அந்நாடு எப்போதும் நிறுத்துவதே இல்லை என்பதுதான் வருத்ததைக் கொடுக்கிறது.