இனி கொரோனா வைரஸ் - COVID-19 என அழைக்கப்படும் – உலகச் சுகாதார நிறுவனம் அறிவிப்பு
- IndiaGlitz, [Wednesday,February 12 2020]
சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா நாவல் வைரஸ் (Novel corona - nCov) என்றே இதுவரை சொல்லப் பட்டு வந்தது. கொரோனா என்பது பல வைரஸ் கிருமிகளின் தொகுதி என்பதால் புதிய வைரஸை தனித்துக் காட்டும் விதத்தில் தற்போது உலக சுகாதார நிறுவனம் COVID – 19 எனப் புதிய பெயரை அறிவித்துள்ளது.
ஏன் புதிய பெயர் சூட்டப் பட்டுள்ளது?, எந்த ஒரு வைரஸ் பரவலையும் தனி ஒரு பெயரால் ஏன் அழைக்கப் பட வேண்டும்?, COVID – 19 எனத் தேர்வு செய்தது எதனால்? என்பதைக் குறித்த விளக்கங்களை உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்து உள்ளார்.
புதிய கொரோனா வைரஸ் க்கு தனியாக ஒரு பெயர் சூட்டி இருப்பது எதிர்காலத்தில் இந்த நோயை அடையாளம் காண பயன்படும். COVID – 19 என்ற பெயர் 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட WHO வின் வழிகாட்டுதலின் படியே வைக்கப் பட்டு இருக்கிறது. புவியியல், இருப்பிடம், ஒரு விலங்கு, ஒரு தனிநபர் அல்லது மக்கள குழுவைக் குறிக்காமல் பெயர் வைக்கப் பட வேண்டும் என்பதே WHO வின் விதிமுறையாகும். அதோடு நோய் தொடர்பு மட்டுமே பெயரில் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
”புதிய பெயர் வைக்கப் படும் போது நோய் பரவிய இடத்தைப் பற்றிய குறிப்பு எதுவும் சேர்க்கப் பட கூடாது. ஒரு வேளை வுஹான் மாகாணத்தின் பெயர் குறிப்பிடப் பட்டு இருக்குமானால் அது மக்களை களங்கப் படுத்துவதற்கு சமமாகும்” என வட கிழக்கு பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியரான வெண்டி பர்மெட் டைமிட் முன்பே குறிப்பிட்டு இருந்தார்.
பரவிய இடத்தின் பெயரைப் பயன்படுத்தும் போது அங்குள்ள மக்களை அந்த நோயுடன் சேர்த்து சிந்திப்பதற்கு வழி வகுத்து விடும். அதோடு இனவெறி மட்டுமல்லாது ஆசியாவை பற்றிய தவறான கண்ணோட்டத்திற்கும் இது வழிவகுக்கும் என்றும் பலர் கருத்து தெரிவித்து இருந்தனர். உண்மையில் இது போன்ற நிகழ்ச்சியும் வரலாற்றில் நடந்திருக்கிறது.
1918 இல் தோன்றிய இன்ஃப்ளுயன்ஸா தொற்றுநோயை அமெரிக்கர்கள் பிரெஞ்சு நோய் என்றே அழைத்தனர். இன்ஃப்ளுயன்ஸா வைரஸை “பன்றி காய்ச்சல்“ என்று பயன்படுத்துவது தவறு என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் பெயர் சந்தையில் பன்றி இறைச்சியின் விற்பனையை குறைத்துவிட்டது எனவும் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2009 இல் WHO “பன்றி காய்ச்சல்” என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என முடிவு எடுத்தது. எனவே பன்றிக்காய்ச்சலை இன்ஃப்ளூயன்ஸா (H1N1) என்றே குறிப்பிட்டனர். சூடானில் தோன்றிய எபோலா வைரஸ் நோய் பரவிய இடத்தில் ஒட்டிய நதியை வைத்தே பெயர் வைக்கப் பட்டுள்ளது. எனவே இத்தகைய சூழ்நிலை தவிர்க்கப் பட வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்புகளில் இருந்து எழுந்தன.
இதற்கு பின்னர் தோன்றிய வைரஸ் நோய்களுக்குப் பெயரிடும் போது மிகவும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என முடிவெடுத்த WHO 2015 இல் புதிய விதிமுறைகளை வகுத்து கொண்டிருக்கிறது. அதன் படியே தற்போது கொரோனா வைரஸ்க்கு COVID – 19 எனப் பெயர் சூட்டப் பட்டுள்ளது.
நோய் தொடர்புடைய ”கொரோனா”, ”வைரஸ்”, ”நோய்” என்பதில் இருந்து COVID என்று உருவாக்கப் பட்டது. மேலும் கொரோனா வைரஸ் பற்றிய தகவல் உலகச் சுகாதார நிறுவனத்திற்கு 31 டிசம்பர் 2019 அன்று அனுப்பப் பட்டது. எனவே இதை நினைவுப்படுத்தும் விதமாக 19 என்ற எண் இதோடு சேர்க்கப் பட்டுள்ளது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.