தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க இன்றுமுதல் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்… என்னென்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வரும் 30 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிவரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த முயற்சி பலன் அளிக்கவில்லை என்றால் இரவு நேரத்தில் கொரோனா ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என்றும் இந்த கொரோனா தொற்று 2 ஆவது அலையை சமாளிக்க அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் பிரதமர் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் இன்றுமுதல் நடைமுறைக்கு வரும் புது விதிமுறைகள்-
மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனவே இதற்கான தடை தொடரும்.
தமிழ்நாடு முழுவதும் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும்.
நோய் பரவலைக் கருத்தில் கொண்டு திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு இன்றுமுதல் தடை விதிக்கப்படுகிறது.
மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட சில செயல்பாடுகளுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது.
தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொது மக்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுவதையும், கை சுத்திகரிப்பான் உபயோகப்படுத்துவதையும் முகக்கவசம் அணிவதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்து அனுமதிக்க வேண்டும்.
முகக்கவசங்கள் அணியாமல் இருப்பவர்களைக் கட்டாயமாக அனுமதிக்கக் கூடாது. ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படும். தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மத்திய அரசு அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளுக்கு ஏற்ப தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளைத் தொழிற்சாலை நிர்வாகம் செய்ய வேண்டும். நிலையான வழிகாட்டு நடைமுறைகளை முறையாகப் பின்பற்றாத தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நிலையான வழிகாட்டு நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றி, மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும் தனியார் பஸ் மற்றும் சென்னையில் இயக்கப்படும் மாநகர பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு நிலையான வழிகாட்டு நடைமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றி, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர்நாடகா செல்லும் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.
முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைக் கட்டாயம் பின்பற்றி, காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள் அனைத்து ஷோ ரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி) ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 50% இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் இரவு 11 மணி வரை அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும். மேலும் உணவகங்களில் இரவு 11 மணி வரை பார்சல் சேவை அனுமதிக்கப்படும். கேளிக்கை விடுதிகள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் கூடும் இடங்கள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகத்தில் உள்ள திரையரங்குகள் உள்பட அனைத்து திரையரங்குகளும் 50% இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படும்.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி உள் அரங்குகளில் மட்டும் அதிகபட்சமாக 200 பேர் மட்டும் பங்கேற்கும் வண்ணம், சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் அனுமதிக்கப்படும். அதேபோல திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும் இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்.
விளையாட்டு அரங்குகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்கள் அனுமதியின்றி விளையாட்டு போட்டிகள் நடைபெற அனுமதிக்கப்படும். நீச்சல் குளங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
31.08.2020 அன்று அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்றி அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படும். இருப்பினும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.
நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி சின்னத்திரை மற்றும் திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்புகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். இருப்பினும், படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் சின்னத்திரை, திரைப்படக் கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்துகொண்டு அல்லது தடுப்பூசி போட்டுக் கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்வதை நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.
வாடகை மற்றும் டாக்சி வாகனங்களில் டிரைவர் தவிர்த்து 3 பயணிகள் மட்டும் பயணிக்க ஏற்கனவே 1.7.2020 முதல் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கட்டுப்பாடகள் கண்டிப்பாக அமல்படுத்தப்படும். ஆட்டோக்களில் டிரைவர் தவிர்த்து 2 பயணிகள் மட்டும் பயணிக்க ஏற்கனவே 1.7.2020 முதல் அனுமதிக்கப்பட்டள்ள நிலையில் இந்தக் கட்டுப்பாடு கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நபர்களை தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும். சென்னை மாநகராட்சி பகுதிகளில் நோய்த்தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கும், கள அளவிலான குழுக்கள் அமைத்துக் கண்காணிக்கப்படும். அதுபோன்று அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். நோய்க்கட்டப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள், இந்தப் பகுதிகளில் இருந்து வெளியில் வராத வகையில் காவல் துறை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதரத்துறை ஊழியர்களை கொண்டு 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
மேலும் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளித்தல் உள்ளிட்ட நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுதோடு, நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு உதவி புரிய தன்னார்வலர்களும் நியமிக்கப்படுவர் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments