தேர்தல் களத்துக்கு தயாராகி வரும் அஇஅதிமுக… விறுவிறுப்பான பணிகளால் உற்சாகம்!!!
- IndiaGlitz, [Friday,November 13 2020]
தமிழகத்தில் அடுத்த மே மாதம் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில் புதிதாக ஐந்து குழுக்களை உருவாக்கி தேர்தல் களத்துக்கு விறுவிறுப்பாகத் தயாராகி வருகிறது அதிமுக. இதற்காக அஇஅதிமுக சார்பில் 11 பேர் கொண்ட அறிக்கை தயாரிப்பு குழுவும், 3 பேர் கொண்ட தேர்தல் பரப்புரை குழுவும், ஊடக சந்திப்புகளுக்கு 7 பேர் கொண்ட குழுவும், எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கு பதிலளிக்க 9 பேர் கொண்ட குழுவும், ஊடக ஒருங்கிணைப்புக்கு 3 பேர் கொண்ட குழுவும் என அனைத்துக் குழுக்களும் புதிதாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்க்கொள்ள அதிமுக 11 பேர் கொண்ட அறிக்கை குழு உட்பட 5 தேர்தல் குழுக்களை உருவாக்கி உள்ளது. அஇஅதிமுக தன் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களையும் சேர்த்து 11 பேர் கொண்ட அறிக்கை குழுவை கட்டமைத்துள்ளது. இதை தவிர்த்து எதிர்க்கட்சியின் புகார்களுக்கு பதில் அளிக்கவும் ஊடக ஒருங்கிணைப்பிற்கும் தனித்தனி குழுக்களை உருவாக்கி இருக்கிறது.
மேலும் தேர்தல் சம்பந்தப்பட்ட பணிகளுக்காக அனைத்துத் தொகுதிகளையும் 30 மண்டலங்களாக பிரித்து அதற்கு பொறுப்பாளர்களாக அமைச்சர்களையும் அஇஅதிமுக தலைமை நியமித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து சிறப்பாக செயல் ஆற்றி வருவதால் ஆட்சியைப் பிடிக்கும் என பெரும்பாலான அரசியல் ஆர்வலர்கள் கருத்துக் கூறி வருகின்றனர்.