பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவன ஊழியர்கள் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று!!!

  • IndiaGlitz, [Saturday,October 03 2020]

கொரோனா தாக்கத்தால் நேரில் சென்று ஷாப்பிங் செய்வோரை விட ஆன்லைனில் ஆர்டர் செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அமேசான் நிறுவனத்தின் தலைமையக ஊழியர்கள் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருப்பதாக அந்நிறுவனமே தகவல் வெளியிட்டு உள்ளது. இத்தகவல் அமெரிக்க மக்களிடையே கடும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனா தாக்கத்தின் ஆரம்பத்தில் இருந்தே அமேசான் நிறுவன ஊழியர்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக அமேசான் நிறுவன ஊழியர்களின் தொற்று எண்ணிக்கையை வெளியிடுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை ஏற்ற நிறுவனம் தற்போது தனது ஊழியர்களின் தொற்று எண்ணிக்கையை வெளியிட்டு உள்ளது.

அதன்படி அமெரிக்காவில் உள்ள அமேசான் நிறுவனத்தின் மளிகை பொருட்களின் விற்பனை நிலையத்தில் மட்டும் 13.7 லட்சம் பேர் வேலை செய்கின்றனர் என்றும் அவர்களில் 19,800 பேருக்கு கடந்த மார்ச் முதல் தற்போது வரை தொற்று உறுதிசெய்யப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்பத்தில் இருந்தே தங்களது ஊழியர்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்ததாகவும் அதன்மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப் பட்டதாகவும் அந்நிறுவனம் கருத்துத் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் அமேசான் நிறுவனத்தின் 650 தளங்களில் தினமும் 50 ஆயிரம் பேர் என்ற வீதத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற செய்தியையும் அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதனால் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 33 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகி இருக்கிறது எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டு இருக்கிறது.