கோவில் கோபுரத்தில் உள்ள நிர்வாணச் சிற்பங்கள், குறி வழிபாடு- அபத்தமா? ஆராதனையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
வானத்தைப் பார்த்து உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் ஒவ்வொரு ஊருக்கும் அழகு சேர்க்கும் ஒரு பிரம்மாண்டம் தான். நாம் தூரத்தில் இருக்கும் போது அது ஒரு தெய்வாதீனமான உணர்வினை ஏற்படுத்தவும் செய்கிறது. அதே கோபுரத்தைப் பக்கத்தில் இருந்து பார்க்கும்போது அட என்ன கொடுமை இது? என்று நம்மில் பலர் முகம் சுழித்திருப்போம். கோவில் கோபுரங்கள் நமது பார்வையில் இருந்து சற்றித் தள்ளி மேலே இருப்பதால் பல நேரங்களில் கவனிக்காது விட்டவர்கள் கூட ஏதோ ஒரு நாளில் அதைப் பார்த்து அருவருப்புடனோ, அல்லது ஆச்சரியப்பட்டோ விழி பிதுங்கி இருக்கலாம். ஏனென்றால் கோபுரங்களில் உள்ள சிலைகள் அப்படிபட்டவை.
ஏறக்குறைய எல்லா கோவில்களிலும் கீழ் வரிசையில் இருந்து தொடங்கும் நிர்வாணப் பொம்மைகள் ஒரே மாதிரியான வடிவங்களில் அடுத்தடுத்து வரிசைப் படுத்தப் பட்டு இருக்கும். நிர்வாணக் கோலம் மட்டுமல்ல, உடலுறவு காட்சிகளும் மிக விரிவாக வர்ணனை செய்யப் பட்டிருக்கும். அதோடு முடிந்திருந்தால் கூட பரவாயில்லை. இரண்டு மூன்று ஆண்கள், பெண்கள் என்று கூட்டமாக உடலுறவில் ஈடுபட்டு இருப்பதைப் போன்ற சிற்பங்கள் பலரை இன்னும் விரக்திக்குத் தள்ளியிருக்கும்.
இந்தக் காட்சிகளை பார்த்த எந்த ஒரு சாதாரண மனிதனுக்கும் இதுதான் நமது கலாச்சாரமா? கோவிலுக்கும் இந்த சிற்பத்துக்கும் என்ன தொடர்பு? ஏன் இவ்வளவு அசிங்கமாக சிலைகள் வைக்கப் பட்டு இருக்கின்றன? என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழும். ஏனெனில் நமது இந்திய கலாச்சாரத்தில் பெரும்பாலான கோவில்களில் இந்த வகையான சிற்பங்களைப் பாத்திருக்க வாய்ப்புண்டு. வெளிப்படையாக நிர்வாணத்தைக் காட்டுவது, உடலுறவு பற்றி விளக்கம் கொடுப்பது, கூட்டம் கூட்டமாக உடலுறவில் ஈடுபடுவது போன்ற சிற்பங்கள் நமது கலாச்சாரத்தில் மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றிலும் இருக்கிற சாதாரணமான ஒரு விஷயம் என்றால் மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.
உலக நாடுகள் அனைத்திலும் நிர்வாணத்தை வெளிப்படுத்துவது போன்ற சிற்பங்களும் சிலைகளும் ஓவியங்களும் பழைய நாகரிகம் முதற்கொண்டு இன்றைக்கு வரைக்கும் இருக்கின்றன. அவை கோவில், மதம் என்ற புனிதத்துடன் இணைந்தே காணப்படுகிறது என்பது இன்னும் வியப்பை ஏற்படுத்தலாம். சிற்பம், கலை, ஓவியம் எல்லாமே வேறு வேறு துறைகளாக இன்றைக்குக் கருதப்பட்டு வருகின்றன. ஆனால் பழைய நாகரிகங்கள் அனைத்திலும் மதத்துடன் இணைந்தே வளர்ந்துள்ளது.
மதத்துடன் இணைந்தே வளர்ந்து விட்ட காரணத்தினால் மட்டும் நிர்வாணச் சிலைகள் கோவில்களில் வைக்கப்பட வில்லை. நிர்வாணச் சிலை, உடலுறவு சிலைகள் கோவில்களில் வைக்கப்பட்டதற்கான வேறு காரணங்களும் இருக்கத்தான் செய்கிறது. ஏனெனில் பண்டைய மதங்களில் கடவுள் என்பது தனித்த ஒரு பெரும் சக்தியாக ஒருபோதும் கருதப்படவில்லை. அன்றாட வாழ்வில் உணவுக்கும், உயிருக்கும், உடைக்கும் பாதிப்பு ஏற்படும் போது காக்கக் கூடிய ஏதோ ஒரு இயற்கையாக மட்டுமே கடவுள் கருதப் பட்டது. வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து ஆதாரங்களையும் கடவுள் என்ற ஒற்றை குறியீட்டில் இருந்து பார்த்த பண்டைய மனிதன் காதலையும், காமத்தையும், வீரத்தையும் அதே கடவுளிடம் இருந்து தான் துவக்கி இருக்கிறான்.
நமது பக்தி இலக்கியங்களில் ஆண்- பெண் பாவத்துடன் நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடல்களைப் பாடுவதைப் பார்த்திருப்போம். ஆண்டாள் கண்ணனை தன் கணவனாக நினைத்தாள் என்பது பக்தியாகக் கருதப்படுகிறது. அது எப்படி ஆண்டாள் கண்ணனை கணவனாக நினைப்பது பக்தியாகும்? என்று யாரும் கேள்வி எழுப்புவதில்லை. ஏனென்றால் அதைப் பற்றிய புரிதல் நமக்கு இல்லை. நமது கலாச்சாரத்தில் பக்திக்கும் காதலுக்கும் பெரிய வித்தியாச மில்லை என்பதனை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அது சரி… ஏன் நிர்வாண சிலைகள் கோபுரங்கள் இருக்கின்றன ? இந்த கேள்விக்கு வருவோம்.
காமத்திற்கும் கோவிலுக்கும் உள்ள தொடர்பு
சிற்பம், ஓவியம், கலை, இலக்கியம் எல்லாம் நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் தெரிந்து கொள்ள உதவும் ஒரு வரலாற்று ஆவணமாகப் பார்த்திருப்போம். ஆனால் இவையெல்லாம் புழங்கப் பட்ட காலத்தில் அவையும் ஒரு ஊடகம் போன்று செய்திகளை பரப்புவதற்குப் பயன்பட்டு இருக்கும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. தொலைக்காட்சி, இணையதளம், வாட்சப் போன்ற ஊகடங்கள் இல்லாத காலக் கட்டத்தில் சிற்பங்கள் கலைகள், ஓவியங்கள் அன்றைய காலக்கட்டத்தின் கலாச்சாரத்தைக் குறித்தும், சமூக நடைமுறைகளைக் குறித்தும் மக்களுக்கு எடுத்துச் சொல்லும் ஊடகமாகப் பயன்பட்டு இருக்கின்றன.
நிர்வாணச் சிலைகள் குறித்து மகாராஜா காலத்து கதை ஒன்று பொதுவாகச் சொல்லப்படுவது உண்டு. “ஒரு இளவரசிக்கு பருவ வயது வந்த பின்பு திருமணத்தின் மீது ஆசை இல்லாமல் இருந்தாளாம். அவளது தந்தை எப்படி தனது மகளிடம் திருமணம் பற்றியும் உடலுறவு பற்றியும் சொல்லி புரிய வைப்பது என்று யோசித்து ஒரு பெரிய நீச்சல் குளத்தைக் கட்டினாராம். அதில் உடலுறவை விளக்குவது போன்ற பல ஓவியங்களை வரைய செய்தாராம். அந்த ஓவியத்தைப் பார்த்த இளவரசிக்குத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்ததாம்” இந்தக் கதையை நம்மில் பலர் கேட்டிருப்போம். இத்தகைய செய்தி பரவல் தான் கோவில் கோபுரங்களிலும் நிகழ்த்தப் பட்டிருக்கிறது.
சமயப் பற்றாளர்கள் இந்த நிர்வாணச் சிலைகளைக் குறித்து வேறு காரணங்களையும் கூறுகின்றனர். காமத்தை தாண்டி இறைவனை அடைய வேண்டும் என்ற விதியின் படியே இந்தச் சிற்பங்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன என்று கூறப்படுகிறது.
“கோவிலில் உள்ள சிற்பங்கள் நமது கண்ணில் நேரடியாகப் பார்க்கும் தூரத்தில் இல்லை என்பதும் முக்கியமான ஒரு விஷயம். குறைந்த பட்சம் 10 அடிக்கு மேல் இருக்கின்ற சிற்பங்களை நாம் முழுவதுமாக கவனிப்பது இல்லை. அந்த நிர்வாணம் பெரும்பாலும் கண்களை உறுத்துவது இல்லை. அதோடு பக்தி என்ற பரவசத்திற்குள் இந்தக் காட்சிகள் நம்மை மனதளவில் பாதிப்பினை ஏற்படுத்துவது இல்லை. அப்படி பார்த்தாலும் மனதை அடக்கிக் கொள்ளும் ஒருவன் தான் உண்மையான பக்தனாக இருக்க முடியும்” என்று சமய வாதிகள் கூறுகின்றனர். எந்தக் காரணத்திற்காக வைக்கப் பட்டிருக்கிறதோ? ஆனால் உண்மையில் காமத்தை தூண்டும் விதத்தில் அமைக்கப் பட்டிருக்கிறது என்பது மட்டும் தெளிவாக விளங்கி கொள்ள முடிகிறது.
மதம் – மனித வாழ்வியல்
பல்வேறு பண்பாட்டு பழக்க வழக்கங்கள் கலந்து உருவான ஒரு வாழ்க்கை நெறிதான் மதம் என்பதனை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையை எந்த ஒரு மதமும் துறவு நிலையில் மட்டுமே வாழ கட்டாயப்படுத்துவது இல்லை.
ஆதி கால வழிபாட்டில் பெரும்பாலும் மனித பிறப்பு உறுப்புகள் தெய்வமாக வழிபட பட்டிருக்கின்றன. சிந்து வெளி நாகரிகத்தில் ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்பில் இருந்து ஒரு மரம் வளர்ந்து வருவது போல காட்சியினை நம்மால் பார்க்க முடிந்தது. கிட்டத் தட்ட கி.மு. 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு நாகரிகத்தில் பெண்ணின் பிறப்பு உறுப்பு வெளிப்படையாக வழிபாட்டு பொருளாக இருந்திருக்கிறது என்றால் என்ன நினைப்பீர்கள்.
உலக அளவில் அனைத்து நாடுகளிலும் பிறப்பு உறுப்புகளின் வழிபாடு இருக்கத்தான் செய்கிறது. ஜப்பானில் கானயாமா என்ற இடத்தில் அமைந்துள்ள கோவிலில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆண்குறி திருவிழாவே நடத்தப்படுகிறது. இதே போன்ற நிர்வாண வழிபாடுகள் அவ்வபோது நமது ஊரிலும் சில ஆதி சமூகங்களில் நடத்தப் படுவதை அவ்வபோது செய்தித்தாள்களில் பார்க்க முடியும்.
இன்றைக்கும் நாட்டுப் புறங்களில் காணப்படுகின்ற சக்தி கோவில்களில் பெரிய பெரிய தனங்களும் வயிறும் இருப்பது போன்ற பொம்மைகள் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. எதற்காக இவ்வளவு பெரிய தனங்கள், வயிறு என்று யோசித்து பார்த்தால் உண்மை விளங்கத்தான் செய்யும். விஞ்ஞானம் வளராத ஒரு காலத்தில் இனப்பெருக்கதிற்கு தனங்களும் வயிறும் தான் முக்கிய காரணமாக கருதப் பட்டிருக்கும் எனவே அது வழிபாட்டில் பெரியதாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. இதனை பண்பாட்டு ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர்.
பாபிலோன், கிரேக்கம் போன்ற நாகரிகங்களில் உடல் உறுப்புகள் வழிபாடு செய்வதைப் போன்ற பழைய சிலைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஆதி காலத்தில் பிறப்பு உறுப்புகளை வழிபட வேண்டிய கட்டாயம் எதனால் ஏற்பட்டிருக்கும் என்பது ஒரு சுவாரசியமான கேள்வி. ஆதி சமூகம் கூட்டம் கூட்டமான வாழுகிற போது பெரிய அளவில் போரினாலும் இயற்கை பாதிப்புகளினாலும் உயிரிழப்புகள் நடக்கும். எனவே இனப்பெருக்கத்தை அதிகப் படுத்த வேண்டிய தேவையை ஒட்டி இத்தகைய உடல் உறுப்புகளை வழிபடத் தொடங்கியிருப்பர் என்று மானுடவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
நமது கலாச்சாரத்தில் உடல் உறுப்புகளின் வழிபாடு, நிர்வாணச் சிலைகள் இனப்பெருக்கத்திற்காக மட்டுமல்லாது காமம், உடலுறவு புனிதமாகக் கருதப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றன. இந்தியாவில் சமண, பௌத்த சமயங்கள் நிர்வாணத்தை அதன் மதக் கொள்கைகளில் ஒன்றாகவே வகுத்துள்ளன. இடைக்கால கிறிஸ்துவத்திலும் குறி வழிபாடுகள் இருந்திருக்கின்றன. பல தொல்லியல் அகழாய்வுகளில் ஆண் குறிகளால் ஆன புதையல்களைத் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதிலும் குறி வழிபாட்டு முறைகளில் ஒரே விதமான சிந்தனையே காணப்படுகிறது.
இந்தியக் கலாச்சாரம்
சங்க இலக்கியப் பாடல்களைப் பார்த்தாலே தெரியும். சமூகத்தின் முக்கியமான இரண்டு கடமைகள் காதலும், வீரமும். அன்றைய சமூகத்தில் மனிதச் சமூகத்தின் இருப்பு மட்டுமே பெரிதாகக் கொண்டாடப் பட்டு இருக்கிறது.
அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் யோனி (Female organ) வழிபாட்டிற்கு என்று தனி கோவில் காணப்படுகிறது என்றால் ஆச்சர்யம் வருகிறதா? கவுகாத்தி நகரில் மேற்கு பகுதியில் உள்ள நீலாச்சல் குன்றில் ஒரு கோவில் உண்டு. அதற்கு பெயர் காமாக்யா கோவில். அந்த குன்றில் சக்தி பீடம் ஒன்றை ஏற்படுத்தி மிகப் பெரிய விழாவாக கொண்டாடி வருகிறார்கள்.
மற்றக் கோவில்களைப் போன்று வெளிச்சமாக இல்லாமல் பாதாள குகைக்குள் தான் யோனி உருவம் வைக்கப் பட்டு இருக்கும். இந்தக் கோவிலில் பெண்ணின் யோனி போன்ற உறுப்புப் பகுதிதான் மட்டும்தான் தெய்வமாக வழிபடப் படுகிறது. ஒரு வருடத்தில் மூன்று நாட்கள் மட்டுமே கோவில் மூடப்படுகிறது. அந்த மூன்று நாட்களும் சக்தியின் மாதவிடாய் காலமாக கருதப் படுகிறது. அந்த நாட்களில் கோவிலின் நீருற்று சிவப்பு நிறமாக மாறுவதாகவும் நம்பப் படுகிறது.
இந்தியாவின் ஒரு கோடியில் மாதவிடாய் புனிதமானது என்று அந்த நாட்களில் விழா எடுக்கிறார்கள். இன்னொரு கோடியில் மாதவிடாயால் பெண்கள் அசுத்த மானவர்கள் என்று கோவிலில் அனுமதிக்காத நிலைகளும் இருக்கத்தான் செய்கின்றன. மனிதனது மனப்போக்குகள் தான் மதம் வழிபாடுகள் முக்கியமானது என்பதை இந்த இருதுருவங்களும் தெளிவாக உணர்த்துகிறது.
சிவன் – என்ற குறியீடு
சிவ லிங்கத்திற்கு ”அரு உரு அற்றவன்“ என்று மதப் பின்னணியில் இருந்து விளக்கம் கொடுக்கப் படுகிறது. ஆனால் அடிப்படையில் ஆணின் பிறப்புறுப்பினை அடையாளப்படுத்தும் ஒரு குறியீடு என்பதை யாராலும் மறுக்க முடியாது. உலகில் சைவத்தில் மட்டுமே இப்படியான வழிபாடு இருக்கிறதா என்றால் அது முற்றிலும் தவறான முடிவே ஆகும்.
சிவ வழிபாட்டினைக் குறித்து இன்னொரு விதத்தில் கருத்துக் கூறப்படுகிறது. இந்தியாவில் இந்து சமயம் பலம் வாய்ந்ததாக மாறிப் போனதன் அடையாளம் தான் ஆண்குறி வழிபாடு என்றும் ஆய்வாளர்கள் கருத்து கூறி வருகின்றனர். காரணம் அதுவரை இருந்த பெண் தெய்வங்கள் எல்லாம் தனித்த கோவிலையும் வழிபாடுகளையும் கொண்டிருந்தன. ஆனால் சிவன், விஷ்ணு போன்ற தெய்வ வழிபாடுகள் பல்கி பெருகிய பின்பு பெண் தெய்வங்கள் துணை தெய்வங்களாக மாற்றப் பட்டு விட்டன. இது தனி வரலாற்று பின்புலம் கொண்டது.
காமத்தைக் கடந்தே கடவுளை காண வேண்டும் என்று பொதுவாக ஒரு பழமொழி சொல்லப்படும். ஆனால் பழைய நாகரிகத்தில் காமத்தையே கடவுளாகவும் கருதியிருக்கிறார்கள் என்பதில் இருந்து காமம் புனிதமான ஒன்றாகக் கருதப்பட்ட நமது கலாச்சாரத்தைத் தான் உணர்ந்து கொள்ள முடிகிறது.
இன்றைய சூழல்
விஞ்ஞானம் வளர்ந்து விட்ட இந்தக் காலக் கட்டத்திலும் கோவில் வழிபாடுகளில் இருந்துதான் கலவியைத் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ற கேள்வி எழலாம். அன்றைய ஊடகம் காமத்தை புரிந்து கொள்ள சிற்பம் என்றிருந்தது. காமத்தை ஊட்ட சினிமா என்கிற அளவில் இன்றைய ஊடகம் வளர்ந்து விட்ட சூழலில் பல்வேறு கலாச்சாரச் சீர்கேடுகள் பெருகி வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.
எது காதல், எது காமம் என்று இன்றைக்கு பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப் பட வேண்டிய கலாச்சாரக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காம உணர்வுகளில் இரண்டு ஒன்றுபட்ட மனங்கள் இணைந்து பங்கு கொள்ள வேண்டும். மன ஒற்றுமை இல்லாமல் செய்யப்படுகின்ற எந்த ஒரு செயலும் பயனை விளைவிக்காது என்பதைத்தான் இந்த சிற்பங்கள் நமக்கு காலந்தோறும் தொடர்ந்து வலியுறுத்துகின்றன எனலாம்.
பெண்ணை முழுமைப் படுத்துவதற்கு ஆண் காரணமாகிறான். ஆணை முமையானவனாக உணர வைக்க பெண் காரணமாகிறாள். முழுமைத் தன்மையை அடைவதற்கு எப்போதும் நமது கலை, கலாச்சாரம் துணை நிற்கும் என்பதே நமது கலாச்சாரத்தின் பெருமை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
DhanaLakshmi
Contact at support@indiaglitz.com