கர்நாடகாவில் புதியவகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!
- IndiaGlitz, [Friday,April 23 2021]
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்து வருகிறது. இந்த தீவிரத்தை அடுத்து கர்நாடகாவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸின் மரபணு கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுகாதகர் அறிக்கை வெளியிட்டு உள்ளார். மேலும் பெங்களூரு நகரம் முழுக்க தற்போது சுகாதார நெருக்கடி நிலவி வருவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் தற்போது பல மாநிலங்களில் சுகாதார நெருக்கடி நிலவி வருவதாக ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் பெங்களூருவில் உள்ள பல மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாக தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் தற்போது கர்நாடகாவில் கொரோனா வைரஸின் உருமாற்றம் அடைந்த புதிய வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் சுதாகர் தெரிவித்து உள்ளார். மேலும் இந்த புது வைரஸ் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது தெரியவில்லை என்றும் ஆனால் கொரோனாவின் 2 ஆவது அலையில் இது உருமாற்றம் அடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் உருமாற்றம் அடைந்த வைரஸ் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என்றும் இந்த வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதோடு அம்மாநில தலைநகர் பெங்களூருவில் சுகாதார நெருக்கடி நிலை ஏற்பட்டு உள்ளது என்பதைத் தெரிவித்த அவர் அதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் பெங்களூருவில் மட்டும் 13 அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என போதுமான படுக்கை வசதிகளை மாநில அரசு ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு 40 டன் ஆக்சிஜன் கையிருப்பு இருக்கிறது. மேலும் ஆக்சிஜன் தயாரிப்பதற்கான உபகரணங்கள் வரவழைக்கப்பட்டு இருக்கிறது எனப் பல தகவல்களை அமைச்சர் சுதாகர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஏற்கனவே இங்கிலாந்தில் புதிய உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உலகையே கடும் பதற்றத்தில் ஆழ்த்தியது. அதையடுத்து தென்ஆப்பிரிக்காவில் புது உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரு வைரஸ்களும் தீவிரமாக பரவும் தன்மைக் கொண்டவை என்பதை மருத்துவர்கள் தெளிவு படுத்தி இருந்தனர். இந்த வகை வைரஸ்கள் இந்தியாவில் பெரிய அளவிற்கு பாதிப்பு எதையும் ஏற்படுத்தாத நிலையில் தற்போது கர்நாடகாவில் புதிய உருமாறிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் இதேபோல கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்திலும் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பது உறுதிச்செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.