சொகுசு காரை விற்று கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சப்ளை… அசத்தும் இளைஞர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவை பொறுத்தவரை தற்போது 19 லட்சத்து 29 ஆயிரத்து 329 நோயாளிகள் கொரோனாவிற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் இந்தியா முழுக்கவே தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து மத்திய அரசு 50 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை இறக்குமதி செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படியான நெருக்கடி நிலையில் மும்பையை சேர்ந்த ஷாநவாஸ் ஷேக் எனும் இளைஞர் தன்னுடைய 22 லட்சம் மதிப்பிலான சொகுசு காரை விற்று அந்த பணத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கி வருகிறார். அதோடு கடந்த ஆண்டும் ஷாநவாஸ் இதேபோல கொரோனா நோயாளிக்கு உதவிக்கரம் நீட்டி இருக்கிறார். ஆனால் கடந்த ஜனவரியில் கொரோனா நோயாளிகளிடம் இருந்து வெறும் 50 அழைப்பு மட்டுமே வந்ததாகக் கூறும் இந்த இளைஞர் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 500-600 அழைப்புகள் வருவதாகவும் கூறியிருக்கிறார்.
இதனால் ஆக்சிஜன் சப்ளை செய்வதற்காக தனி ஒரு அலுவலகத்தையும் அதற்கான அழைப்பு வசதியையும் இந்த இளைஞர் ஏற்படுத்தி இருக்கிறார். மேலும் அழைப்பு விடுக்கும் கொரோனா நோயாளிகளுக்கு அவர்களின் இருப்பிடம் தேடி ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச் சென்று அவர்கள் பயன்படுத்திய காலி சிலிண்டர்களை திரும்ப பெற்றுக் கொண்டு வருகிறார். மும்பை போன்ற பெருநகரங்களில் கொரோனா நோயாளிகள் படுக்கை வசதி இல்லாமலும் ஆக்சிஜன் பற்றாக்குறையுடனும் இருப்பதைப் போன்ற பல்வேறு வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் துயரத்தை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் இளைஞர் ஷாநாவாஸ் தனது எஸ்.யு.வி. ஃபோர்டு காரை விற்று அந்த பணத்தின் மூலம் 600 ஆக்சிஜன் சிலண்டரை வாங்கி இருக்கிறார். தற்போது வரை 4,000 கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜனை இலவசமாகக் கொடுத்து உள்ளதாகவும் குறிப்பிடுகிறார். இதுபோன்ற செயல்களைப் பார்த்து பல கொரோனா நோயாளிகள் கண்ணீர் சிந்தி இளைஞருக்கு நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments