உங்க கையில்தான் இருக்கு… தமிழக மக்களுக்கு முதல்வர் வைத்த உருக்கமான வேண்டுகோள்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில், கொரோனா ஊரடங்கை நீடித்துக் கொண்டே போகமுடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது உங்கள் கைகளில்தான் உள்ளது என வீடியோ மூலம் உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு கடந்த 24 ஆம் தேதியில் இருந்து அமலில் இருக்கிறது. இதனால் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. கொரோனாவை முழுமையாகக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர வேண்டும். முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து பல்வேறு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து தந்துள்ளது.

மக்களை நோக்கி காய்கறிகள், மளிகைப் பொருட்கள் வந்து சேர ஏற்பாடுகள் செய்துள்ளோம். ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. பொதுமக்களுக்குத் தேவையான 13 பொருட்கள் அடங்கிய தொகுப்பு தரப்பட உள்ளது. இதனை பொதுமக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்களில் குறிப்பிட்ட பிரிவினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது உண்மைதான். அதனால்தான் கொரோனா நிவாரண நிதியாக முதல் கட்டமாக ரூ.2,000 கொடுத்துள்ளோம். விரைவில் அடுத்த 2,000 ரூபாய் வழங்கப்படும். இதனைப் பொருளாதார நிபுணர் அபிஜித் பானர்ஜி கூட பாராட்டியுள்ளார்.

இருந்தாலும் ஊரடங்கை நீடித்துக் கொண்டே போகமுடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். அதுவும் மக்களாகிய உங்கள் கையில்தான் இருக்கிறது. கட்டுப்பாடுகளை முழுமையாகப் பின்பற்றினால் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் காக்க ஏராளமான உள்கட்டமைப்பு வசதிகளை கடந்த 3 வாரக் காலத்தில் தமிழக அரசு செய்து கொடுத்துள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற படுக்கைகள் தட்டுப்பாடு என்ற சூழல் இல்லவே இல்லை. நிறைய மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளன என்பதுதான் உண்மை.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களை பார்க்க நான் சென்றதன் மூலம் சிலர் பதற்றம் அடைந்தனர். இந்த எச்சரிக்கை உணர்வு அனைத்து மக்களக்கும் வந்தாக வேண்டும். இத்தகைய தொற்றுக்கு முழுமையான முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

அதனால் அரசின் கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். ஒரு சிலர் மீறினாலும் அதனால் முழுப்பயன் கிடைக்காமல் போய்விடும். முதல் அலைக்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க தவறியதால்தான் இரண்டாவது அலையை நாம் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இந்த இரண்டாவது அலையானது தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புக்கும், நிதி நிலைமைக்கும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதில் இருந்து நாம் விரைவில் மீண்டாக வேண்டும்” என உருக்கமாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது.