ஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை - பஞ்சாப் அடிமேல் அடி வாங்கும் அணிகளின் மோதல்!
- IndiaGlitz, [Sunday,October 04 2020] Sports News
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. துபாயில் அக்டோபர் 4 அன்று நடக்கும் 18ஆவது லீக் போட்டியில் அடிமேல் அடி வாங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.
சென்னைக்கு என்ன வேண்டும்?
அடுத்தடுத்து ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து கடைசி இடத்தில் நீடிக்கிறது. ஷேன் வாட்சன், டூ பிளஸி ஆகியோர் பேட்டிங்கில் சிறந்த அடித்தளம் அமைத்துத் தர வேண்டும். அதே போல மிடில் ஆர்டர் வரிசை சென்னை அணிக்கு தற்போதும் நிலையில்லாததாகவே உள்ளது.
துவக்கமும் சிறப்பாக இல்லாமல், மிடில் ஆர்டரும் பொறுப்பில்லாமல் ஆடுவது இந்த ஆண்டு முழுதும் சிஎஸ்கே அணிக்குப் பெரும் தலைவலியாகவே உள்ளது. நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே களமிறங்கும் என்ற நிலை உள்ளதால், சாண்ட்னர், இம்ரான் தாஹிர் போன்ற வீரர்கள் அணியில் இடம் பெற முடியாத சூழல் உள்ளது.
வருவாரா தல
ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது கேப்டன் தோனி பேட்டிங் செய்தபோது திணறியதைக் காண முடிந்தது. இதனால் பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் தோனி களமிறங்குவாரா என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால் போட்டி முடிந்த பின் தோனி பேசிய விதம் அவர் களமிறங்குவதை உறுதிப்படுத்தும் விதத்தில் இருந்தது. இருந்தாலும் தோனியின் வயது அவருக்கு ஒத்துழைக்கவில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது.
தன்னால் பந்துகளைச் சரியாக ‘மிடில்’ செய்ய முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்ட தோனி, இளம் சாம் கரனை நம்பாமல் தானே ஏன் பெரும்பாலான பந்துகளை எதிர்கொண்டார் என்பதுதான் புதிராக இருக்கிறது. எத்தனையோ போட்டிகளில் பொறுப்பைத் தோளில் சுமந்து வெற்றிகரமாகக் கரை சேர்த்த தோனி, தற்போது அந்தப் பொறுப்பை இளைஞர்களுக்குத் தந்து அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வெற்றி பெற முயல வேண்டும்.
அம்பத்தி ராயுடு, டுவைன் பிராவோ ஆகியோரின் வருகை அணியை வெற்றிப் பாதைக்குத் திரும்பச் செய்யும் என்ற ரசிகர்களின் நம்பிக்கை பொய்யானது. இதனால் இவர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம்.
கேதார் ஜாதவுக்குப் பதில் பிராவோ அல்லது சாம் கரனை முன்னதாக இறக்கி ஆடவைப்பது நல்லது. ஏனெனில் இவர்கள் களத்தில் நின்றால் ரன் விகிதத்தை உயர்த்தக்கூடியவர்கள். அப்படி உயர்த்தினால் அது தோனியின் சுமையைக் குறைக்கும். ஜாதவுக்குப் பதில் நாராயணன் ஜெயதேவைக் களம் இறக்குவது பற்றியும் அணித் தலைமை தீவிரமாக யோசிக்க வேண்டும்.
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கேட்சுகள் தவறவிடப்பட்டதும் அணியின் வெற்றி வாய்ப்பைப் பதித்தது. எனவே, சென்னை அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமாகும்.
பஞ்சாப்: பிரச்சினைகளுக்குப் பஞ்சமில்லை
மறுபுறம் இரண்டு முறைக்கு மேல் 200 ரன்களை கடந்தும் கே.எல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தோல்வியைச் சந்தித்தது. இதற்கு அந்த அணியின் படுமோசமான பவுலிங்கே காரணமாக உள்ளது. முகம்மது ஷமி தவிர அந்த அணியின் மற்ற வீரர்கள் யாரும் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் பவுலிங் செய்யவில்லை. பேட்டிங்கில் ராகுல், மயங்க் அகர்வால் எனப் பலர் கைகொடுத்தபோதும் பவுலர்கள் இல்லாமல் அந்த அணி இமாலய இலக்கைக்கூடத் தடுக்க முடியாமல் தவிக்கிறது.
இடை நிலை மட்டை வரிசையும் பஞ்சாபுக்குச் சொல்லிக்கொள்கிறாற்போல் ஆடவில்லை. எனவே, பஞ்சாப் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை விரைவாக வெளியேற்றினால் சென்னை அணி வெற்றியை வசப்படுத்தலாம்.
அடி மட்டத்தில் உள்ள இந்த இரு அணிகளை ஒப்பிடுகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கை சற்றே ஓங்கியிருக்கிறது. சென்னை அணி தங்களின் வியூகத்தை மெருகேற்றிக்கொண்டு களத்தில் சிறப்பாகச் செயல்பட்டால் வெற்றி பெறலாம்.
எதிர்பார்க்கப்படும் லெவன்
சென்னை சூப்பர் கிங்ஸ்: ஃபாப் டூ பிளஸி, ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, சாம் கரன், பியூஷ் சாவ்லா, சார்துல் தாகூர், தீபக் சாஹர்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்: கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், கருண் நாயர், நிகோலஸ் பூரன், கிலென் மேக்ஸ்வெல், சர்ஃப்ராஸ் கான், ரவி பிஷ்னோ, முகம்மது ஷமி, ஷெல்டன் காட்ரல், முருகன் அஸ்வின். கிறிஸ் ஜோர்டன்.