நூதன முறையில் நூற்றுக்கணக்கான பெண்களை மிரட்டிய ஆசாமி… ஒரு புகாரால் முடிவுக்கு வந்த சர்ச்சை!!!
- IndiaGlitz, [Thursday,December 31 2020]
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தாத நபர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்தும் பெரும்பாலானோர் தங்களது புகைப்படங்களையும் அதில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் அவ்வபோது சில சைபர் குற்றங்களும் நடைபெறுகின்றன.
அந்த வகையில் தலைநகர் டெல்லியை சேர்ந்த ஒருவர் பெண்களின் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை வைத்து நூற்றுக்கணக்கான பெண்களை மிரட்டி அவர்களிடம் பணப்பறிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு இருக்கிறார். இதற்காக சுமித் ஜா எனும் 26 வயதான அந்த இளைஞர் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டு இருக்கும் பெண்களின் புகைப்படங்களை மட்டும் பதிவிறக்கம் செய்து இருக்கிறார். பின்பு அந்தப் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக மாற்றி அதை அவர்களுக்கே மீண்டு அனுப்பவும் செய்து இருக்கிறார்.
இதனால் பயந்துபோன அந்த பெண்களை மிரட்டி அவர்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் பணப் பறிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு இருக்கிறார். இதேபோல வங்கியில் பணியாற்றி வரும் பெண் அதிகாரி ஒருவரின் புகைப்படம் ஆபாசமாக சமூக வலைத்தளத்தில் பரவி வந்த நிலையில் அவர் போலீஸ் உதவியை நாடி இருக்கிறார். இந்த விசாரணையில் ஈடுபட்ட டெல்லி போலீசார் சுமித் ஜாவை கைது செய்து மார்பிங் செய்யப்பட்ட பெண்களின் புகைப்படங்களை அழித்ததாகவும் கூறியுள்ளனர்.
மேலும் இந்த ஆண்டில் மட்டும் இதேபோன்ற சைபர் குற்றங்கள் நாடு முழுவதும் 220 பதிவாகி இருப்பதாகவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தகவல் வெளியிட்டு உள்ளது.