மீண்டும் ஒரு ஆணவக்கொலை: தந்தையே மகளை கொலை செய்த கொடுமை!

  • IndiaGlitz, [Tuesday,February 05 2019]

கவுசல்யாவின் கணவர் உடுமலை சங்கர், அம்ருதாவின் கணவர் பிரணாய் என இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் அவ்வப்போது ஆணவக்கொலை குறித்த திடுக்கிடும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத பெற்றோர்களும், பெற்றோர்களின் மனதை மாற்றும் வரை பொறுமை காக்காமல் அவசர அவசரமாக திருமணம் செய்யும் காதல் ஜோடிகளாலும் இந்த ஆணவக்கொலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆந்திராவை சேர்ந்த வைஷ்ணவி என்ற கல்லூரி மாணவி ஒருவர் அவரது தந்தையால் ஆணவக்கொலை செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கல்லூரி மாணவி வைஷ்ணவி தன்னுடன் படிக்கும் இளைஞர் ஒருவரை காதலித்ததாகவும், அவரது காதலன் வேறு ஜாதி என்பதால் இந்த காதலுக்கு வைஷ்ணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ஆனால் தனது காதலில் உறுதியாக இருந்த வைஷ்ணவி, தனது காதலனையே திருமணம் செய்யவுள்ளதாக கூறியதால் அவரது தந்தையே வைஷ்ணவியை கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் ஆந்திர போலீசார் வைஷ்ணவியின் பிணத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.