இன்று முதல் ஸ்ருதியை அதிகப்படுத்தவுள்ளேன்: ஓராண்டு விழாவில் கமல் பேச்சு

  • IndiaGlitz, [Thursday,February 21 2019]

மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு இதே நாளில்தான் நடிகர் கமல்ஹாசன் மதுரையில் தொண்டங்கினார். இக்கட்சி ஒரு வருடத்தை பூர்த்தி செய்த நிலையில் இன்று ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் கொடியேற்றி வைத்து கமல்ஹாசன் பேசியதாவது:

தமிழகம் முழுக்க மக்கள் நீதி மய்யம் குடும்பம் பரவியுள்ளது. தமிழகம் முழுக்க கட்சி கொடியும் ஏற்றப்பட்டுள்ளது. அடுத்து எங்கே ஏற்றிவைக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த இலக்கை நோக்கி பயணம் செய்வோம்

இதுவரை குளத்து மீனாக இருந்த மக்கள் இன்று வெளியே வந்துள்ளனர். குளத்து மீனுக்கு, வெளியே நடக்கிறது என்பது தெரியாது. ஆனால் அரசியல் உதவாக்'கரைகள்' உடைந்து மக்கள் வெள்ளம் பெருக்கெடுக்கும்போது, குளம் வேறு நதி வேறு கிடையாது. குளற்று மீன், ஆற்று மீனாக மாறும். அதன் அடையாளம்தான் இது.

தனியாக நிற்போம் என்று சொன்னது நான் கிடையாது. நாம் என்றபோதே தனிமை நீங்கிவிட்டது என்று தான் அர்த்தம். மக்கள் பலம் இருக்கும் தைரியத்தில் தான் நான் சொல்கிறேன். எந்த கணிப்பு என்ன சொன்னாலும் மக்கள் என் கையை பிடித்து என்நாடி பார்த்து, இங்கே புத்துயிர் இருக்கிறது என்று கண்டு பிடித்து உள்ளனர். அவர்கள் வைத்தியர்கள் இல்லை, வருங்காலம் கணிக்கும் ஜோதிடர்கள்.

இதுவரை புரியவில்லை என்று சொன்னவர்கள் இப்போது நமது வலிமையை புரிந்து கொண்டனர். இனிமேல்தான் எனது ஸ்ருதியை அதிகப்படுத்தவுள்ளேன். அதே நேரத்தில் அதிக பிரசங்கம் இருக்காது. நியாயமான பிரசங்கங்கள் இன்று முதல் அதிகரிக்கும். இன்னும் அவை வலிமை வரும். உங்கள் அமைப்பெல்லாம் தயாராகிவிட்டதா என்று இன்னும் நம்மை பார்த்து சிலர் கேட்டுக்கொண்டுள்ளார்கள். அவர்கள் மோதிப் பார்க்கட்டும், அப்போது அவர்களுக்கு தெரியும் நாம் யார் என்பது, இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.