பெய்ரூட்டில் குண்டு வெடித்த ஒருசில நிமிடங்களில் காயத்துடன் பிரசவம் பார்த்த மருத்துவர்: வைரலாகும் புகைப்படங்கள்
- IndiaGlitz, [Monday,August 10 2020]
சமீபத்தில் லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் என்ற நகரில் அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்த குடோன் திடீரென வெடித்ததில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு சேதம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் நொறுங்கியது மட்டுமின்றி இதில் பலர் உயிரிழந்தனர் என்பதும் ஆயிரக்கணக்கானோர் காயமுற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் பெய்ரூட் முழுவதும் பெரும் பதட்டத்தில் இருந்தது.
இந்த நிலையில் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் வெடிகுண்டு சம்பவம் நடந்த ஒரு சில நிமிடங்களில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த சம்பவம் நடந்த இடத்தின் அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனை முழுவதுமே கிட்டத்தட்ட இடிந்து சிதிலம் அடைந்து கண்ணாடி துகள்கள் சிதறி கிடந்தது. ஆனால் அந்த இக்கட்டான இடத்திலும் அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவர் ஒருவர் பிரசவம் பார்த்தார்.
அமோனியம் நைட்ரேட் வெடிகுண்டால் டாக்டருக்கும் முகமும் உடம்பின் பல பகுதிகளில் காயமேற்பட்டு ரத்தம் சொட்டிக்கொண்டிருந்த போதிலும் அவர் அந்தப் பெண்ணையும் குழந்தையையும் காப்பாற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பிரசவம் பார்த்தார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பதும், அந்த கர்ப்பிணியையும் குழந்தையையும் காப்பாற்றிய அந்த டாக்டருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.