வாக்கு எண்ணிக்கையை நடத்த கூடாது… நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த புதிய தமிழகம் கட்சி!
- IndiaGlitz, [Wednesday,April 28 2021]
நடைபெற்று முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாகக் குற்றம் சாட்டி மே 2 ஆம் தேதி நடக்கவிருக்கும் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்குமாறு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்ததில் இருந்தே புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இந்தத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும், வாக்குப் பதிவை நிறுத்த வேண்டும், குடியரசு தலைவர் ஆட்சியைத் தமிழகத்தில் அமலுக்கு கொண்டு வரவேண்டும் எனக் கூறிவந்தார். இதற்கு காரணம் தமிழகத்தில் மட்டும் தேர்தல் ஆணையத்தால் 430 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்றும் தமிழகத்தில் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுமே பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாகவும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்.
அதோடு தேர்தல் நேரத்தில் பணப்பலத்தை தடுக்கும் வகையில் இரு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப் படுவார்கள் என தேர்தல் அறிவிப்பின்போது தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு இருந்தது. ஆனாலும் தமிழகத்தில் பணப்பட்டுவாடா நடைபெற்று உள்ளது. எனவே தமிழகத் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை நியமித்து விசாரணை நடத்த கோரியும் வரும் மே 2 ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்கக் கோரியும் புதியத் தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வரும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.