மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு முழு உருவச்சிலை.. முதல்வர் திறந்து வைத்து மரியாதை!
- IndiaGlitz, [Thursday,January 28 2021]
மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு வெளியிட்டார். முன்னாதாக போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றி முதல்வர் திறந்து வைத்ததை அடுத்து இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல நேற்று சென்னை மெரினா கடற்கரையில் ரூ.80 கோடி செலவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் திறந்து வைக்கப்பட்டது. இந்த விழாவில் லட்சக் கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஃபீனிக்ஸ் பறவையின் வடிவில் அமைக்கப்பட்டு உள்ள இந்நினைவிடத்தை குறித்து பலரும் முதலமைச்சருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் நினைவு இல்லத்தை பார்வையாளர்களுக்குத் திறந்து வைக்கவும் தமிழக அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்திலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஒரு முழு திருவுருவச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தச் சிலையை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். 9 அடி உயரம் கொண்ட இச்சிலையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர் தமிழக அரசியல் மட்டுமல்லாது, கல்வி, பெண்கள் முன்னேற்றத்திற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய பங்குகளை பட்டியலிட்டார்.
இத்திருவச் சிலை, மெரினா கடற்கரையின் சாலைக்கு அருகிலேயே இருக்கிறது. இதனால் சாலையில் செல்லும் தொண்டர்கள் அனைவரும் ஆர்ப்பரித்து இத்திருவச் சிலையை பார்த்துச் செல்கின்றனர். முன்னதாக ஃபீனிக்ஸ் வடிவில் நினைவிடம், அந்த நினைவிட வாயிலில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு திருவுருவச் சிலை, அடுத்து போயஸ் கார்டனில் நினைவு இல்லம், தற்போது தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில் முழுதிருவச் சிலை என்று அதிமுக தொண்டர்களே வியக்கும் அளவிற்கு பல அதிரடிகளை முதல்வர் எடுத்து வருகிறார்.