கடைசி நிமிடத்தில் விக்ரம் லேண்டரின் தகவல் துண்டிப்பு: விஞ்ஞானிகளுக்கு பிரதமர் ஆறுதல்
- IndiaGlitz, [Saturday,September 07 2019]
இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம் நேற்று திட்டமிட்டபடி நிலவை நெருங்கி அதன் ஆர்பிட்டரிலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டரை நள்ளிரவு திட்டமிட்டபடி நிலவின் தென்பகுதியில் தரையிறக்கும் பணிகளை விஞ்ஞானிகள் செய்து வந்தனர். பெங்களூருவில் உள்ள இஸ்ரோ செயற்கை கோள் கட்டுப்பாட்டு மையத்தில் ஏராளமான விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை கண்காணித்து வந்த நிலையில் சந்திரயான்-2 நிலவில் தரையிறங்குவதை காண பிரதமர் மோடி அவர்கள் நேற்றிரவு பெங்களூரு வந்தார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் தரையிரங்க தொடங்கிய விக்ரம் லேண்டரின் செயல்பாடுகள் துல்லியமாக இருந்ததாகவும், நிலவில் இருந்து 35 கிலோ மீட்டர் உயரத்தில் சந்திராயன் 2, சுற்றி வந்த போது நிலவின் தென்பகுதியை நோக்கி தரையிறங்கிய விக்ரம் லேண்டரின் வேகம் படிப்படையாக குறைக்கப்பட்டு அதை மெதுவாக தரையிறக்கும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டனர். விக்ரம் லேண்டரின் செயல்பாடுகள் திட்டமிட்டபடி சரியாக இருந்ததால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் 35 கிலோ மீட்டரிலிருந்து படிப்படிப்படியாக சந்திரனை நெருங்கிய விக்ரம் லேண்டர், நிலவில் இருந்து சரியாக 2.1 கிமீ தூரத்தில் இருந்தபோது திடீரென அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டது .இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தனர். மீண்டும் விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ளும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டபோதிலும் பலன் ஏதும் அளிக்கவில்லை .
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், கடைசி நிமிடத்தில் விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னல் துண்டிக்கப்பட்டதாகவும், விக்ரம் லேண்டரின் சிக்னலை பெற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இந்த நிலையில் இந்த அரிய நிகழ்வை நேரில் பார்க்க வந்திருந்த பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கூறியதோடு, ‘நாம் இதுவரை செய்தது மிகப்பெரிய விஷயம் என்றும், தைரியமாக இருங்கள் என்றும், நான் உங்களுடன் இருக்கின்றேன் கவலை வேண்டாம் என்றும் ஆறுதல் கூறினார். மேலும் இன்று காலை அவர் இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் கலந்தாலோசனை செய்துவிட்டு பின் நாட்டு மக்களுக்கும் அவர் உரையாற்றவுள்ளார்.