இந்தியாவில் புது கிரிக்கெட் அணியா? ஷிகர் தவான் கேப்டனா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் இளம் வீரர்களைக் கொண்ட புது கிரிக்கெட் அணி ஒன்று உருவாக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அந்த அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்தப் போட்டி மீண்டும் இலங்கை அல்லது அரபு எமிரேட்ஸில் நடத்தப்படலாம் எனக் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐசிசி நடத்தவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வரும் ஜுன் 2 ஆம் தேதி இங்கிலாந்து செல்ல உள்ளனர். இந்த அணியில் 20 மூத்த இந்திய அணி வீரர்கள் இடம்பெற்று இருப்பர்.
அதோடு இறுதிப் போட்டி முடிந்தவுடன் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிக் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடவுள்ளது. இதனால் அடுத்து வரும் ஜுன், ஜுலை ஆகிய மாதங்களில் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் படு பிசியாக இருப்பார்கள். இந்நிலையில் இலங்கைக்கு எதிரான குறைந்த ஓவர் கொண்ட கிரிக்கெட் தொடர் போட்டி வரும் ஜுலை மாதம் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் மூத்த கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்ள முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. காரணம் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளுக்காக அனைத்து வீரர்களும் இங்கிலாந்தில் இருப்பார்கள். இதனால் கொரோனா தனிமைப் படுத்தலுக்கு நேரம் கிடைக்குமா என்ற சந்தேகமும் இருந்து வருகிறது.
இந்நிலையில் இளம் வீரர்களை கொண்ட புது கிரிக்கெட் அணி ஒன்று இந்தியாவில் உருவாக்குவதற்கு பிசிசிஐ முயற்சித்து வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து பேசும்போது, “இலங்கை தொடருக்கு டி20, ஒருநாள் போட்டிக்கு ஸ்பெலிஸ்ட் வீரர்கள் தேர்வு செய்யப் படுவார்கள். மாறுபட்ட புதுமுக இந்திய அணியாக இது இருக்கும்” என பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார்.
இதனால் இந்தியாவில் புது கிரிக்கெட் அணி உருவாவது உறுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அணியில் இளம் வீரர்களான தேவ்தத் படிக்கல், சூரியகுமார் யாதவ், பிரிதிவி ஷா, திவேத்தியா போன்றோர் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் அல்லது இஷான் கிஷன் இருப்பார் என்றும் கருதப்படுகிறது.
இந்தப் புது கிரிக்கெட் அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக இருப்பார் என்ற தகவலும் கசிந்து உள்ளது. காரணம் அவர் திறமையான பேட்டிங் மற்றும் அமைதியான குணத்தோடு இருப்பதாகவும் இதனால் அணியை திறமையாக வழிநடத்துவார் என்று தேர்வுக்குழு நம்புவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments