இந்தியாவின் புதிய பவர் “ரன் மெஷின்“ சபாலி வர்மா
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் மல்யுத்த போட்டியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட டங்கல் படத்தில் வரும் ஒரு காட்சியில், நடிகர் அமீர்கான் தனது மகள்களின் முடியை ஒட்டக் கத்திரிப்பார். முடி இருந்தால் அலங்காரம் செய்வதற்கு நேரம் செலவாகும், விளையாட்டில் கவனம் இருக்காது என்பது போன்று காட்சி அமைக்கப் பட்டு இருக்கும். நீளமாக வளர்ந்த முடியை ஒரு நொடியில் வெட்டும் காட்சியில் உண்மையாகவே அந்த நாயகிகள் கதறி இருப்பார்கள்.
ஆனால் சபாலி வர்மா விஷயத்தில் முடியை வெட்டிக் கொண்டது ஒரு மாபெரும் அத்யாயத்திற்கே அடித்தளத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது. பழமைவாதக் கருத்துக்களைக் கொண்ட தனது கிராமத்தை விட்டு கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற ஆர்வத்தில் 9 ஆவது வயதில் ஹரியாணாவிற்கு வருகிறார் சபாலி வர்மா. ஆனால், பெண் என்ற ஒரே காரணத்திற்காக ஹரியாணா கிரிக்கெட் பயிற்சி நிறுவனத்தில் அவர் ஒதுக்கப் படுகிறார்.
துளியும் யோசிக்காத அவரது தந்தை சபாலி வர்மாவின் முடியை ஒட்ட கத்தரிக்கிறார். உடனே சபாலி வர்மா ஆணாக மாற்றப் படுகிறார். சிறுவயதாக இருப்பதால் ஒரு ஆணைப் போலவே பயிற்சி களத்தில் தனது முதல் பயணத்தை தொடருக்கிறார். கிரிக்கெட் மீது அசுரத்தனமான வெறி கொண்ட சபாலி வர்மா தன்னுடன் பயிற்சி பெறும் இளம் ஆண் வீரர்களுக்கு பெரும் சவாலாகவே இருக்கிறார்.
இந்த செய்தி சபாலி வர்மா டி-20 உலகப் பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தேர்வான பின்பு சமூக வலைத் தளங்களில் அதிகம் பேசப்படுகிறது. கிரிக்கெட் விளையாட்டில் பெரிய வெற்றிகளை பெற வேண்டும் என விரும்பிய ஒரு தந்தையின் விருப்பம் தற்போது நிஜமாகி இருக்கிறது.
சச்சினை விஞ்சிய சபாலி வர்மா
சச்சின் விளையாடுவதை நேரில் பார்க்க வேண்டும் என்று ஒரு காலத்தில் தீராத கனவு கண்டிருக்கிறார் வர்மா. ஆனால், சச்சினின் விளையாடும் கடைசி போட்டியின் தேதி அறிவிக்கப் படுகிறது. உடனே தனது கனவை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கிறார். 2013 இல் லஹ்லியில் நடந்த கடைசி போட்டியில் சச்சின் டெண்டுல்கர் விளையாட்டை நேரில் பார்த்து ரசிக்கிறார். இந்தப் பயணம் கூட சபாலி வர்மாவுக்கு எளிதாக கிடைத்து விட வில்லை.
சாதாரண பயிற்சி பெறும் சிறுமியாக சச்சின் விளையாட்டைப் பார்த்து ரசித்த சபாலி வர்மா இன்று பெண்கள் டி-20 உலகக் கோப்பை போட்டியில் துவக்க ஆட்டக் காரராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சச்சின் தனது 16 ஆவது வயதில் முதல் சதத்தை அடித்து வெற்றியாளர் ஆனார். இந்தச் சாதனை தற்போது முறியடிக்கப் பட்டு இருக்கிறது. 15 ஆவது வயதில் வர்மா, தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டி-20 போட்டியில் தனது முதல் அரை சதத்தை அடித்து சச்சினின் சாதனையை முறியடித்திருக்கிறார்.
இவரின் அபார வெற்றிக்குப் பின்பு சச்சினைப் பார்த்து வாழ்த்தும் பெறுகிறார். வாழ்நாளில் கனவு முழுமை பெற்றதாக வர்மா தனது உணர்வை வெளிப்படுத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்தச் சந்திப்பை குறித்து சச்சின் தனது டிவிட்டர் பக்கத்தில், “சபாலி உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. எனது கடைசி ரஞ்சி விளையாட்டை காண நீங்கள் லஹ்லிக்கு எப்படி பயணம் செய்தீர்கள் என்பதைத் தெரிவித்த நீங்கள், தற்போது அதே இந்தியாவுக்காக விளையாடுவதைப் பார்ப்பதற்கு ஆச்சர்யமாக இருக்கிறது. உங்கள் கனவுகளைத் துரத்திக் செல்லுங்கள், ஏனென்றால் கனவுகள் நனவாகும். விளையாட்டை அனுபவித்து எப்போதும் உங்களது சிறந்ததைக் கொடுங்கள்” எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
சபாலி வர்மாவும் சச்சினுடன் நிகழ்ந்த சந்திப்பை குறித்து ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார். அதில், “நான் இந்த விளையாட்டை எடுத்ததற்கு காரணம் சச்சின் சார் தான். எனது முழு குடும்பமும் சிலை வணங்குவது போல் அவரை வணங்கியது. இன்று என் குழந்தை பருவ ஹீரோவை சந்தித்தேன். இது எனக்கு ஒரு சிறப்பு நாள். எனது கனவு நனவாகியது” என்று தெரிவித்து இருந்தார்.
வர்மாவின் தென் ஆப்பிரிக்காக்கு எதிரான அசுரத்தனமான ஆட்டம் இந்தியா முழுவதும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த வெற்றிக்குப் பின்னர் தான் டி-20 பெண்கள் உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப் படுகிறார்.
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி
பாய்ஸ் கட்டிங் வைத்துக் கொண்டு துவக்க ஆட்டக் காரராக இறங்கி தனது வலிமையான பவர் – ப்ளேவை தற்போது ஆஸ்திரேலியாவில் காட்டி வருகிறார். எதிரணி வீராங்கனைகளுக்கு சிம்ம சொப்பனமாகவே இருக்கிறார். களத்தில் துளியும் பயமே இல்லாமல், கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் பவுண்டரிகளாக மாற்றிவருகிறார். பந்து வீச்சாளரின் நம்பிக்கையை குலைத்து விடுவதில் வல்லமை பெற்றவர் என்று இவரைக் குறித்து பலரும் பெருமை பாராட்டி வருகின்றனர்.
கடந்த நவம்பரில் தான் 16 வயதை எட்டி இருக்கிறார். இன்னும் பள்ளிப் படிப்பைக் கூட முடியாத வர்மாவுக்கு அவரது கனவை பற்றிய தெளிவு இருக்கிறது. இவர் உலகின் மிகப் பெரிய வீராங்கனைகளை மைதானத்தில் பார்க்கும் போது கொஞ்சமும் பயப்படுவதில்லை என்பதே முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் 49 பந்துகளில் 73 ரன்களை விளாசி தள்ளிய போதே இந்தியா ரசிகர்கள் மத்தியில் வலிமையான வீராங்கனையாக ஒட்டிக் கொண்டார். டி-20 உலகக் கோப்பை போட்டியில் இந்த எதிர்ப்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.
மேலும், களத்தில் தனித்து செயல்பாட்டை கொண்ட சபாலி வர்மாவின் முக்கியத்துவத்தை இந்திய கிரிக்கெட் குழுவும் முழுமையாக உணர்ந்தே கொண்டிருக்கிறது. அத்தனை ஆக்ரோஷத்துடன் விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் டீம் அவரை அனுமதித்து இருக்கிறது. சபாலியிடம் இருக்கும் அசுரத்தனமான கிரிக்கெட் ஆர்வமே இத்தனைக்கும் காரணமாக இருக்கிறது எனலாம்.
இந்தியாவின் பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய பாதைகளை அமைப்பதற்கு இவர் கண்டிப்பாக உதவியாக இருப்பார் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. கிரிக்கெட் குழு அவரை செய்தியாளர்களின் கண்களில் இருந்து மறைத்தே வைத்திருக்கிறது. ஊடக வெளிச்சம் ஒருபோதும் அவருக்கு பதட்டத்தை வரவழைத்து விடக் கூடாது என இந்திய கிரிக்கெட் அமைப்பு எச்சரிக்கையாக இருக்கிறது.
எதிர்காலத்தில் வர்மா தனது அனுபவத்தின் மூலமாக டெம்போவில் எப்படி பேட் செய்வது என்பதைத் தெரிந்து கொள்வார். டெம்போவில் விளையாட பழகிக் கொண்டுவிட்டால் அவரது ஆட்டம் தரமாக இருக்கும். அவரின் ஆட்டத்தை குறித்து பலர் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். அனுபவ முதிர்ச்சி இன்னும் அவருக்கு பல நுணுக்கங்களை கற்றுத் தரும். ஒரு சிறந்த விளையாட்டு வீராங்கனையாக நிலைத்து நிற்பதற்கான அனைத்துத் தகுதிகளும் இவரிடம் குடிகொண்டு இருக்கிறது என கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.
டி-20 உலகக் கோப்பை
தற்போது பெண்கள் டி-20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. ‘ஏ‘ பிரிவில் பங்களாதேஷ்க்கு எதிரான போட்டியில் 17 பந்துகளுக்கு 39 ரன்களை குவித்து இருந்தார். இந்த ஆட்டத்தின் வெற்றி வாய்ப்பில் சபாலி வர்மாவுக்கு முக்கிய பங்கு இருந்தது.
‘ஏ’ பிரிவிற்கான இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியிலும் தொடக்க ஆட்டக் காரரான சபாலி வர்மாவே களம் கண்டார். இதில் இந்தியாவின் அதிரடி வீராங்கனையான மந்தனா 11 ரன்களில் ஆட்டம் இழக்கிறார். அவருடன் கூட்டணி சேர்ந்த இந்தப் போட்டியில் சபாலி அதிரடி காட்டி அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார். இந்தப் போட்டியில் 34 பந்துகளுக்கு 46 ரன்களை குவித்தார். இரண்டு போட்டிகளிலும் ஆட்ட நாயகியாக சபாலி வர்மாவே தேர்வு செய்யப் பட்டார் எனபதும் குறிப்பிடத் தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments