ஒருவழியாக ஜப்பான் கப்பலில் சிக்கித் தவித்த இந்தியர்கள் தயாகம் திரும்பினர்
- IndiaGlitz, [Thursday,February 27 2020]
ஜப்பானுக்குச் சொந்தமான டைமண்ட் பிரின்சன்ஸ் கப்பல் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி ஹாங்காங்கில் இருந்து ஜப்பானின் யோகிஹோமா துறைமுகத்தில் தனது நங்கூரத்தை பாய்ச்ச இருந்தது. ஆனால் சீனாவில் கொரோனா படுத்திய பாட்டை தெரிந்து கொண்ட ஜப்பான் அரசு கப்பலில் இருந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என முதலில் மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.
அதன்படி, கப்பலில் இருந்த 3700 பேருக்கும் கொரோனா மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில் 61 வயதான மசாகோ இஷிடா என்ற முதியவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததை தெரிந்து கொண்ட அந்நாட்டு சுகாதாரத் துறை, கப்பலை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு அனுமதி மறுக்கிறது. எனவே, யோகிஹோமா துறைமுகத்தில் இருந்து சற்று தொலைவிலேயே அந்த கப்பல் நிறுத்தப் பட்டது.
கொரோனா பாதிக்கப் பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள் முதலில் தனிமைப் படுத்துகின்றனர். தொடர்ந்து அனைத்துப் பயணிகளையும் பாதுகாப்பான முறையில் தனி அறைகளில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன. கொரோனா படிப்படியாக 80 க்கும் மேற்பட்டவர்களுக்கு பரவிய நிலையில் கப்பலிலேயே வைத்து சிகிச்சையும் மேற்கொள்ளப் பட்டது.
கொரோனா தொற்று பரவியதை அடுத்து பயணிகள் கடும் பீதியில் தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கு கோரிக்கை விடுத்தனர். அதன்படி ஒவ்வொரு நாடும் தங்களது பயணிகளை மீட்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். டைமண்ட் பிரின்சன்ஸ் கப்பலில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த அன்பழகன் இந்தியர்களை மீட்குமாறு ஒரு வீடியோவையும் அனுப்பி இருந்தார். கப்பலில் இருப்பவர்களை பத்திரமாக மீட்குமாறு இந்தியாவிலும் பல தரப்புகளிலும் இருந்து கோரிக்கை வைக்கப் பட்டது.
டைமண்ட் பிரின்சன்ஸ் கப்பலில் 138 இந்தியர்கள் இருந்த நிலையில் தற்போது 119 பேர் ஏர் இந்திய விமானம் மூலமாகப் பத்திரமாக மீட்கப் பட்டு உள்ளனர். அவர்கள் பல நாட்களுக்கு பின்பு தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பி தங்களது மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
கப்பலில் இருந்த இந்தியர்களான 138 பேரில் 132 பேர் கப்பல் குழுவைச் சேர்ந்தவர்கள். வெறும் 6 பேர் மட்டுமே பயணிகள். இந்த மொத்த தொகையில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்ட நிலையில் அவர்களுக்கு ஜப்பான் நாட்டிலேயே வைத்து சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இது குறித்து இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்தியர்களை மீட்பதற்கு உதவி செய்தமைக்காக ஜப்பான் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.