மலேசியாவின் 3 மாநிலத்திற்கு கொரோனாவை பரப்பிய நபர்… 3 மாதம் சிறை மற்றும் பரபரப்பு சம்பவம்!!!

  • IndiaGlitz, [Friday,August 14 2020]

 

தமிழகத்தின் சிவகங்கையில் இருந்து மலேசியாவிற்கு சென்ற நபர் அங்குள்ள 3 மாநிலத்திற்கு கொரோனாவை பரப்பியதாக பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. கடந்த மாதம் சிவகங்கையில் இருந்து மலேசியா சென்ற நேசர் முகமது சாபுர் பாட்சா என்பவர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கி இருக்கிறார். விமான நிலையத்தில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்திருக்கிறது. ஆனாலும் அவரை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி அனுப்பியிருக்கின்றனர்.

மலேசியாவின் கெடா மாநிலத்தில் சொந்தமாக உணவகம் வைத்திருக்கும் நேசர் முகமது தனிமைப்படுத்திக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்திருக்கிறார். மலேசியா சென்ற ஓரிரு நாளில் தன்னுடைய உணவகத்தில் பணியை தொடங்கி விட்டதாகக் கூறப்படுகிறது. 3 நாட்கள் கழித்தப்பின் அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் பாசிட்டிவ் என ரிசல்ட் வந்திருக்கிறது. தற்போது நேசர் முகமது தன்னுடைய அலட்சியத்தால் 45 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனாவை பரப்பியதாக மலேசியா காவல் துறை அவர்மீது குற்றம்சாட்டி இருக்கிறது. மேலும் மலேசியாவின் 3 மாநில மக்களுக்கு இவர் கொரோனாவை பரப்பியதாகவும் கூறப்படுகிறது.

வெளிநாடுகளில் இருந்து வந்த நபர் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் பொது இடங்களில் நடமாடி 45 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனாவை பரப்பிய வழக்கில் தற்போது நேசர் முகமதுக்கு மலேசிய நீதிமன்றம் 5 மாதம் சிறை தண்டனை வழங்கியிருக்கிறது. அதைத்தவிர 12 ஆயிரம் மலேசியன் ரிங்கிட் தொகையும் அபராதமாக விதிக்கப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இச்சம்பவம் குறித்து அதிர்ச்சியான தகவல் ஒன்றையும் மலேசியச் சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது.

மற்ற இடங்களில் பரவும் கொரோனா பாதிப்பை விட நேசர் முகமது மூலம் பரவிய கொரோனா வைரஸ் மிக வீரியமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அது ஜெனோம் 614 திரிபு வைரஸ் என்பதையும் அந்நாட்டு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதிவேகத்தில் பரவும் இந்த வகை வைரஸ்க்கு தற்போது மலேசிய அதிகாரிகள் சிவகங்கை க்ளஸ்டர் என்று பெயரும் சூட்டியிருக்கின்றனர் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.