இந்தியாவில் இன்று கறுப்பு தினம்… வரலாற்றைத் திரும்பி பார்க்க வைக்கும் சில முக்கிய காரணங்கள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
காஷ்மீர் மீது பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தீவிரவாதக் கும்பல் கடந்த 1947 அக்டோபர் 22 ஆம் தேதி நடத்திய தாக்குதலை நினைவுகூரும் வகையில் இந்தியா முழுக்க இன்று கறுப்பு தினம் அனுசரிக்கப் படுகிறது. இத்தினத்தை ஒட்டி ஸ்ரீநகர் பகுதியில் கண்காட்சி ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்தக் கண்காட்சியில் 1947 அக்டோபர் 22 ஆம் தேதி பாகிஸ்தானின் ஆதரவோடு சில தீவிரவாதக் கும்பல் ஸ்ரீநகர் பள்ளத்தாக்கில் மேற்கொண்ட தாக்குதல்கள், கலவரங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களை நினைவூட்டும் வகையில் பல்வேறு பொருட்கள் மற்றும் ஆவணங்கள் வைக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீநகர் பகுதியில் நுழைந்த தீவிரவாதக் கும்பல் அந்தப் பகுதி மக்கள் மீது அவிழ்த்துவிட்ட தாக்குதல்களுக்கும் வன்முறைகளுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகவே இந்த கறுப்பு தினம் அனுசரிக்கப் படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
அக்டோபர் 22 தினத்தைக் குறித்து, முதலில் ஸ்ரீநகர் பகுதிக்குள் நுழைந்த அத்தீவிரவாதக் கும்பல் அங்குள்ள பழங்குடி மக்களைத் துன்புறுத்தி, பெண்களை அடிமைகளாக மாற்றியதாகவும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இக்கொடுமைகளை நினைவுகூரும் வகையில் ஸ்ரீநகர் பகுதியில் 2 நாள் சிம்போசியம் நடைபெற இருக்கிறது.
காஷ்மீர் பள்ளத்தாக்கை தன்வசம் கொண்டுவர வேண்டும் என நினைத்த பாகிஸ்தான் அன்றையக் காலகட்டத்தில் காஷ்மீர் பகுதியில் உள்ள பழங்குடி மக்களை இணைத்து லஷ்கர் எனும் படையை உருவாக்க நினைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த லஷ்கர் படையில் குறைந்தது 1000 பழங்குடி காஷ்மீரிகளாவது இருக்க வேண்டும் என பாகிஸ்தான் விரும்பியதாகவும் கருதப்படுகிறது. இப்படி உருவாக்கப்பட்ட படைகளுக்கு பாகிஸ்தான் படைப்பிரிவை சேர்ந்த சில அதிகாரிகள் பன்னு, வன்னா, பெஷாவர், கோஹாட், தால் மற்றும் நவ்ஷெரா ஆகிய இடங்களில் வைத்து ஆயுதங்களை வழங்கியதாகவும் வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பாகிஸ்தான் இராணுவத்தின் படை பிரிவு 1947 அக்டோபர் 21 இரவில் முர்ரி-அபோட்டாபாத் பகுதியை ஆக்கிரமித்தது தாக்குதல்களை நடத்தியதாகவும், மற்ற பகுதிகளை லஷ்கர்களை வைத்து ஆக்கிரமிப்புகளை நடத்தியதகாவும் தகவல்கள் கூறப்படுகின்றன. அதோடு அக்டோபர் 26 ஆம் தேதி பாராமுல்லாவுக்குள் நுழைந்த இத்தீவிரவாதக் கும்பல் அந்தப் பகுதி மக்களுக்கு எதிராக அட்டூழியங்களை தொடர்ந்ததாகவும் ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இப்படி நடத்தப்பட்ட பெரும்பாலான கலவரங்களில் அதிகமாகப் பாதிக்கப்பட்டது பெண்கள்தான் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது. சாதி, மதம், இன என்று எந்த வேறுபாடும் இல்லாமல் இளம்பெண்களை கடத்துவது, அவர்களை தாக்குவது மேலும் வன்முறையில் ஈடுபடும் பகுதியில் முடிந்த அளவிற்கு கொள்ளையில் ஈடுபடுவது என அந்நாட்களில் காஷ்மீர் பகுதி மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை நினைவுகூரும் விதமாகவும் அவற்றிற்கு நீதி கேட்கும் விதமாகவும் இந்தியாவில் இன்று கறுப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments