கேலிக்கூத்தாகிய ஊரடங்கு உத்தரவு: மூன்றாவது நிலைக்கு சென்றுவிட்ட இந்தியா
- IndiaGlitz, [Saturday,March 28 2020]
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவின் இரண்டாவது நிலையில் இருந்த போதே சுதாரித்த இந்திய அரசும் இந்தியாவில் உள்ள மாநில அரசுகளும் உடனடியாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தின. கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவாமல் இருப்பதற்கு ஒரே வழி மக்களை வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வைப்பதுதான் என்பதால் இந்த நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு ஓரளவுக்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் வட மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் சரியாக பின்பற்றுவதில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.
குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு பல்வேறு பணிகளுக்காக சென்ற ஆயிரக்கணக்கான மக்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்கின்றனர். நூற்றுக்கணக்கான மைல்கள் இவர்கள் சரியான இடைவெளி இன்றி கூட்டமாக நடந்து செல்வதால் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவ வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.
அதுமட்டுமின்றி மும்பையில் உள்ள ஸ்லம் பகுதிகளிலும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் இந்தியா கொரோனா வைரஸின் மூன்றாவது நிலையை எட்டிவிட்டதாகவே கருதப்படுகிறது. அடுத்த பத்து நாட்கள் இந்தியாவுக்கு மிகவும் கடினமான நாட்களாகும். ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் தனிமைபடுத்துதலை கடைபிடித்து ஊரடங்கு உத்தரவை மதித்தால் மட்டுமே இந்தியாவை காப்பாற்ற முடியும். கூட்டமாக சென்று ஊரடங்கு உத்தரவை கேலிக்குரியதாக்கினால் இந்தியா இன்னொரு இத்தாலியாக மாறிவிடும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.