கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1 லட்சத்து 6 ஆயிரம் புதிய கொரோனா நோயாளிகள்: WHO அதிர்ச்சி!!!
- IndiaGlitz, [Thursday,May 21 2020]
கடந்த 24 மணிநேரத்தில் உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரமாக பதிவாகி இருப்பதாக உலகச் சுகாதார அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு இருக்கிறது. செவ்வாய்கிழமை (மே 19) உலகம் முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 94,751 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 6 ஆயிரமாக அதிகரித்து இருக்கிறது.
கொரோனா நோய்த்தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து நேற்று பதிவான எண்ணிக்கைதான் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது என WHO வின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கவலைத் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கையில் நான்கில் மூன்று மடங்கு அமெரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யாவில் பதிவானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பினால் நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் அமெரிக்கா- 15,51,668 பேர், ரஷ்யா – 3,08,705 பேர், பிரிட்டன் – 2,49,619, பிரேசில் – 2,91,579 பேர், ஸ்பெயின் – 2,32,555 பேர், இத்தாலி – 2,27,364 பேர், இந்தியா – 112,442 பேர் என்ற எண்ணிக்கையில் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப் பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.