தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி சுகாதாரத் துறை அமைச்சர் விளக்கம்

 

சீனாவில் இருந்து இதுவரை தமிழகத்துக்கு 242 பேர் வந்துள்ளனர். இவர்களில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் வைரஸ் தொற்று இருப்பதாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சீனாவின் வுஹான் மாகாணாத்தில் ஜனவரி 10 ஆம் தேதி கண்டறியப்பட்ட கொரோனா வகை வைரஸ் பாதிப்பினால் இதுவரை 300 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் சீனாவிற்கு வெளியே பிலிப்பைன்ஸ் இல் ஒருவர் உயிர் இறந்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. சீனாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக அந்நாட்டு அரசாங்கம் 10,000 படுக்கைகளைக் கொண்ட ஒரு தனி மருத்துவமனை ஒன்றையும் குறைந்த நாட்களில் கட்டி முடித்துள்ளது. மருத்துவ பயன்பாட்டிற்காக இன்று புதிய மருத்துவமனை பயன்படுத்தப் படவும் உள்ளது. மேலும், சீனாவில் தங்கி பயிலும் மாணவர்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளிலும் சீனா விரைந்து செயல்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் நோயின் பரவலைக் கட்டுப் படுத்தும் விதமாக உலக சுகாதார சுறை நிறுவனம் அவசர நிலை பிரகடனத்தை உலக நாடுகளுக்கு அறிவித்துள்ளது. எனவே  சீனாவில் இருந்து சுமார் 600 – க்கும் மேற்பட்டவர்களை மத்திய அரசு சிறப்பு விமானங்கள்  மூலம் நம் நாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.

சீனாவில் இருந்து இந்தியா வரும் பயணிகள் கடும் மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப் பட்டு வருகின்றனர். மேலும் சளி, காய்ச்சல் அறிகுறிகளுடன் இருக்கும் பயணிகளை வீட்டுக்கு அனுப்பாமல் மருத்துவ மனைகளில் தங்க வைத்து அவர்களுக்கான மருத்துவ சிகிச்சையை இந்தியச் சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை மத்திய சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது. இவர்கள் சீனாவின் வுஹான் மகாணாத்தில் இருந்து திரும்பி வந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. வைரஸ் நோயினால் பாதிக்கப் பட்டவர்கள் மிகவும் கடுமையான பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அண்டை மாநிலத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது தமிழகத்திலும் இருப்பதாக  சமூக வலை தளங்களில் செய்திகள் பரப்பப் பட்டு வருகின்றன.  இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் உறுதிப் படுத்தி உள்ளார்.

முன்னதாக, சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தமிழகத்தில் “கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சந்தேகப்படும் வகையில் யாருக்கும் அறிகுறிகள் தென்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் “கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக தமிழகத்தில் பதட்டமோ, பீதியோ, பயமோ வேண்டாம். தமிழகத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்களும் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இது ஒரு தொற்று நோய். மனிதர்களிடம் இருந்து பரவும் என்பதால்  இருமல், தும்மல் இருப்பவர்களிடம் பாதுகாப்புடன் இருந்து கொள்ளுங்கள். மேலும் பொது இடங்களுக்கு சென்று விட்டு திரும்பும் போது பாதுகாப்பான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.

சென்னை கிண்டி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புகளைக் கண்டறிய வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது. சீனாவில் இருந்து திரும்பும் அனைவருக்கும் கொரோனா வைரஸ் இருக்கும் என்று பார்வையைத் தவிர்க்க வேண்டும். நமது சுகாதாரத் துறை சீனாவில் இருந்து திரும்பும் பயணிகளைக் கடும் கண்காணிப்பில் தான் வைத்திருக்கிறது. கொரோனா பாதிப்பு இருப்பதால் சீனா பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.