தடுப்பூசி தட்டுப்பாட்டை அடுத்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
- IndiaGlitz, [Wednesday,June 30 2021]
தமிழகத்திற்கு தற்போது மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 21/2 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளதாகவும் அந்தத் தடுப்பூசி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் இன்று பெரும்பாலான தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
மேலும் தமிழகத்திற்கு இதுவரை 1,46,39,940 தடுப்பூசிகள் வந்துள்ளதாகவும் அதில் 1,45,50,494 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல் தெரிவித்து உள்ளார். மீதமுள்ள 88 ஆயிரம் தடுப்பூசி மற்றும் தற்போது தமிழகத்திற்கு வந்துள்ள 21/2 லட்சம் தடுப்பூசிகளும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் இன்றும் நாளையும் பிரித்து அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்து உள்ளார். இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இப்படி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டால் ஊரடங்கு விதிமுறைக்கு அவசியம் இல்லாமலே போய்விடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
மேலும் வரும் ஜுலை மாதத்திற்குள் மத்தியத் தொகுப்பில் இருந்து 71 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வரும் என்று கூறிய அவர் படிப்படியாக இந்தத் தடுப்பூசிகள் அனைத்தும் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு கொரோனாவில் இருந்து தமிழகத்தைக் காப்போம் எனத் தெரிவித்து உள்ளார்.