காதலித்த பெண்ணின் விருப்பத்தோடு நடந்த திருமணம்… எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக எழும் குரல்கள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு நேற்று காலை 19 வயது கல்லூரி மாணவி சௌந்தர்யா என்பவரை காதல்-சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். இத்திருமணம் மாணவியின் முழு சம்மதத்துடனே நடைபெற்றதாகவும் எம்.எல்.ஏ தரப்பில் இருந்து கூறப்படுகிறது. ஆனால் இத்திருமணத்தைக் குறித்து அப்பெண்ணின் தந்தையும் கோவில் குருக்களுமான சுவாமிநாதன், எம்.எல்.ஏ பிரபு தனது மகளை கடத்திச் சென்றதாக புகார் அளித்துள்ளார். மேலும் தனது மகளை மீட்டுக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி அவர் மனு ஒன்றையும் தாக்கல் செய்திருக்கிறார்.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏவாக இருப்பவர் 38 வயதான பிரபு. இவர் கள்ளக்குறிச்சியை ஒருங்கிணைந்த தனித் தொகுதியாக மாற்ற வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தார். இந்தக் கோரிக்கை ஆரம்பத்தில் நிறைவேற்றப் படாததால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து விலகி டிடிவி தினகரன் அணியில் இயங்கத் தொடங்கினார். பின்னர் கள்ளக்குறிச்சி தனித்தொகுதியாக மாற்றப்பட்டவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சமரசம் செய்து கொண்டார்.
இவர் கடந்த சில வருடங்களாக திருச்செங்கோடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் 2 ஆம் ஆண்டு படித்து வரும் சௌந்தர்யா என்ற பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நேற்று காலை அப்பெண்ணின் சம்மதத்துடன் பல பேர் முன்னிலையில் கலப்பு திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து சௌந்தர்யாவின் தந்தை “எனது குடும்பத்துடன் எம்.எல்.ஏ பிரபு மகன் போல பழகி வந்தார். ஆனால் சுமார் 20 வயது வித்தியாசமுள்ள எனது மகளை இப்படி கடத்திச் செல்வார் என எதிர்ப் பார்க்கவில்லை. நான் சாதி பார்க்கவில்லை. ஆனால் வயது வித்தியாசம் பார்க்க வேண்டுமல்லவா? என செய்தியாளர்கள் முன்னிலையில் குமுறியதாகக் கூறப்படுகிறது.
மேலும் நேற்று மதியும் எம்.எல்.ஏ வீட்டின் முன்பு நின்று உயிரை மாய்த்துக் கொல்லப் போவதாகவும் சுவாமிநாதன் தெரிவித்து இருந்தார். இதனால் பதற்றம் நிலவியதாகவும் அவரை போலீசார் நேரில் சென்று மீட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இருக்கிறது. சட்டரீதியாக அந்தப் பெண் மேஜர் என அறியப்படுவதாலும் அந்தப் பெண்ணின் விருப்பத்துடன் திருமணம் நடந்திருப்பதாலும் இதில் தவறு இல்லை என்றே எம்.எல்.ஏ தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
மேலும் இந்த விவாகரம் தொடர்பாக, எம்.எல்.ஏ பிரபு தரப்பில் “எந்த எதிர்ப்பார்ப்புமின்றி மனதிற்கு பிடித்த பெண்ணை பரஸ்பர சம்மதத்தோடு திருமணம் செய்திருக்கிறார். இதில் என்ன தவறு? இதில் சாதி, மதம், வயது, அந்தஸ்து என எந்த வித்தியாசமும் பெரிதாக தெரியவில்லை. இதில் சுவாரசியம் என்னவென்றால் பிடிவாதமாய் மணந்தே தீருவேன் என்று அடம்பிடித்து திருமணம் செய்து கொண்டது பெண்தானே தவிர ஆண் அல்ல” என்றும் கூறப்பட்டு இருக்கிறது. இதனால் இத்திருமணம் தொடர்பான விவாதம் முற்றுப்பெறும் எனவும் நம்பப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments