திண்டுக்கல் அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பு! 3 ஆக அதிகரித்த எண்ணிக்கை!
- IndiaGlitz, [Saturday,January 23 2021]
கடந்த 19 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி திறந்த அன்று பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து பள்ளி மாணவ மாணவிகளிடமும் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. அப்படி சேலம் மாவட்டம் தும்பல் அடுத்த கிருஷ்ணாபுரம் பள்ளியில் படித்து வரும் 10 ஆம் வகுப்பு மாணவர் ஒருவரிடம் சேகரிப்பட்ட மாதிரியில் கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் அந்தப் பள்ளி மூடப்பட்டதோடு அனைத்து மாணவர்களும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வேலைப் பார்த்த ஒரு ஆசிரியைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அவர் பள்ளி திறந்த அன்று அனைத்து மாணவிகளுக்கும் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை செய்தார் என்பதும் தெரியவந்தது. எனவே இந்தப் பள்ளியும் மூடப்பட்டது. அடுத்ததாக தமிழக அரசு இருமல், சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என்று அறிவுறித்தியது.
தற்போது திண்டுக்கல் மாவட்டம் சின்னகாந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியை ஒருவருக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டு உள்ளது. பழனியில் இருந்து வரும் இவரின் கணவருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்தப் பள்ளியில் பணிபுரியும் 9 ஆசிரியர்கள், 20 பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஆகியோருக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.