மீண்டும் பயோ பிக்கில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு?
- IndiaGlitz, [Friday,March 05 2021]
பாலிவுட்டில் பயோபிக் திரைப்படங்கள் எடுப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் அரசியல் ஆளுமை மற்றும் கலாச்சார ஆளுமைகளை குறித்த வரலாறுகள் தொடர்ந்து படமாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய அரசியலில் தொட முடியாத உச்சத்தை அடைந்து இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை தற்போது திரைப்படமாக உருவாக இருக்கிறது.
“ஏக் அவுர் நரேன்“ (மற்றொரு நரேன்) எனப் பெயரிடப் பட்டுள்ள இத்திரைப்படத்தை வங்காள மொழி இயக்குநர் மிலன் பௌமிக் உருவாக்க இருக்கிறார். இவர் டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யபட்டு மரணமடைந்த நிர்பயா கதை, ஜன சங்க நிறுவனர்களில் ஒருவரான சியாமபிரசாத் முகர்ஜி போன்றோரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கி இருக்கிறார்.
தற்போது இவர் பிரதமர் நரேந்திர மோடியின் திரைப்படத்தை எழுதி இயக்க இருக்கிறார். இத்திரைப்படம் 2 பாகமாக உருவாகும் எனவும் கூறப்பட்டு உள்ளது. இந்தியக் கலாச்சாரத்தை உலகிற்கு எடுத்துக் காட்டிய விவேகானந்தரையும் அரசியல் ஜாம்பவனான நரேந்திர மோடியையும் ஒரே பயோபிக்கில் இவர் திரைப்படமாக்க இருக்கிறார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடியாக பிரபல தொலைக்காட்சி நடிகர் கஜேந்திர சௌஹான் நடிக்க உள்ளார். இவர் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகி வெற்றிப்பெற்ற மகாபாரத தொடரில் யுதிஷ்டிரர் வேடத்தில் நடத்து பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தி மொழியில் உருவாக இருக்கும் இத்திரைப்படத்தை கொல்கத்தாவை சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.