சென்னையை நோக்கி வருகிறது 'கஜா' புயல்
- IndiaGlitz, [Sunday,November 11 2018]
வங்கக்கடலில் உருவாகி சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கும் புயலுக்கு 'கஜா' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை 5.30 மணி அளவில் புயலாக மாறிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் இந்த புயலுக்கு கஜா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த சில நாட்களில் சென்னை உள்பட வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது
கஜா புயல் காரணமாக, நாளை காலை முதல் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும், நவம்பர் 14ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் வரும் 15ஆம் தேதி சென்னைக்கும் ஆந்திராவுக்கும் இடையில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இந்த புயலுக்கு 'கஜா' என்று தாய்லாந்து நாடு பெயர் வைத்துள்ளது. வங்கக்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்தியா, மாலத்தீவு, ஓமான், பாகிஸ்தான் , மியான்மர், இலங்கை, தாய்லாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் ஏற்கனவே பெயர்களை தேர்வு செய்து பதிவு செய்துள்ளன. இந்த பெயர்கள் வரிசையாக வைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வரும் புயலுக்கு தாய்லாந்து வைத்த 'கஜா' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. கஜா' என்றால் 'யானை' என்று பொருள். இந்த புயல் சாதாரண யானையா? அல்லது மதம் பிடித்த யானையா? என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்