ஜெ. வழக்கின் முக்கிய அதிகாரி ஜி.சம்மந்தம் உயிரிழந்தார்....!

  • IndiaGlitz, [Monday,June 07 2021]

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் சொத்துக்குவிப்பு வழக்கில்,  முக்கிய அதிகாரியாக இருந்த ஜி.சம்மந்தம் கொரோனா  தொற்றால் காலமானார்.

கடந்த 1996-ஆம் ஆண்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்ட 4-வர் மீது சொத்து குவிப்பு  வழக்கு போடப்பட்டது. சொத்துகுவிப்பு வழக்கில்  இவர்கள் சுமார் 66 கோடி ரூபாய், சுருட்டியதாக கூறப்பட்டது.  இந்நிலையில் தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு சார்பாக கண்காணிப்பாளர் நல்லம்மா நாயுடு அவர்களின்  தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு,  விசாரித்து வந்தது. இவ்வழக்கில் 1997-ஆம் ஆண்டு,  டிசம்பர் மாதம் காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டவர் தான் ஜி.சம்மந்தம்



சொத்து குவிப்பு வழக்கில்,  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது முதல், சொத்துக்கள் மதிப்பீடு  செய்தது, சாட்சியங்கள்  விசாரணை செய்தது வரை இவ்வழக்கில் முக்கிய அதிகாரியாக சம்மந்தம் செயல்பட்டு வந்தார்.
இதன் பின்பு  நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில்,  திமுக,அதிமுக மாறி மாறி ஆட்சியை பிடித்த காலங்களிலும், இதே பணியை இவர் தொடர்ந்து வந்தார். கடந்த 2004-இல் சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்ட போது, இவ்வழக்கு சார்பாக அங்கு சென்றார் சம்மந்தம். இவருக்கு பதிலாக இந்த வழக்கில் வேறு அதிகாரிகளும் நியமனம் செய்யப்படவில்லை.



சொத்து குவிப்பு வழக்கில் சாட்சியாக ஜெயலலிதா சார்பாக, நீதிமன்றத்தில் வாக்குமூலம் தந்தவர் தான் சம்மந்தம். இதுகுறித்து முன்னாள் முதல்வர் கருணாநிதி கடுமையாக இவரை விமர்சனம் செய்திருந்தார்.சென்னை கோர்ட், கர்நாடகா ஹைகோர்ட், சுப்ரீம் கோர்ட் என சுமார் 19 வருடங்கள் இவ்வழக்கில் கடுமையாக பணியாற்றியுள்ளார், சென்ற 2016- ஆம் ஆண்டு  பணிஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2007-ஆம் ஆண்டு, சம்மந்தம் சிறப்பாக பணியாற்றியதற்காக, குடியரசு தலைவரின் சிறந்த சேவைக்கான  விருதை பெற்றுள்ளார். அதன்பின் 2009-இல் துணைக் கண்காணிப்பாளர்-ஆக  இவருக்கு பதவி  உயர்வு வழங்கப்பட்டிருந்தது.



செங்கல்பட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த சம்மந்தம் அவர்களுக்கு, அண்மையில் கொரோனா தோற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று காலை சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இவரின் இறுதிச்சடங்கு இன்று மதியம் நடைபெறவுள்ளது.