சிவகாசியில் மீண்டும் பட்டாசு ஆலை வெடிவிபத்து… தொடரும் அவலம்!

  • IndiaGlitz, [Saturday,February 13 2021]

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரு பட்டாசு ஆலை வெடிவிபத்து ஏற்பட்டு 19 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வெடிவிபத்து சம்பவம் நடைபெற்று இருக்கிறது. இந்த விபத்தில் 4 அறைகள் கொண்ட கட்டிடம் முழுவதும் தரைமட்டமானது என்றும் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சிவகாசியில் உள்ள மாரனேரி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று திடீர் வெடிவிபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த விபத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தை ஒட்டியுள்ள பல்வேறு பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் அவ்வபோது வெடிவிபத்துகள் ஏற்பட்டு வந்தாலும் பல ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக இந்த பட்டாசு ஆலைகள் இருந்து வருகின்றன. எனவே இத்தகைய ஆலைகளில் வெடிவிபத்து ஏற்படாத வண்ணம் தமிழக அரசு தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் சில நேரங்களில் அசம்பாவிதங்களும் ஏற்பட்டு விடுகின்றன.

அந்த வகையில் நேற்று விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் அடுத்த அச்சன்குளம் பகுதியில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 11 அறைக் கொண்ட பெரிய கட்டிடம் முழுவதும் இடிந்து தரை மட்டமாகியதோடு 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடியும் தமிழக முதல்வரும் இரங்கல் தெரிவித்து இழப்பீடு தொகை வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். இந்நிலையில் மீண்டும் ஒரு பட்டாசு ஆலை வெடிவிபத்து அப்பகுதியில் ஏற்பட்டு இருப்பதால் விருதுநகரில் கடும் பீதி ஏற்பட்டு இருக்கிறது.