கொரோனா ஊரடங்கில் புதிய 50/30 சுழற்சி முறை: கொரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்றுமா???
Send us your feedback to audioarticles@vaarta.com
லண்டனை சேர்ந்த சில பொருளாதார வல்லுநர்கள் கொரோனா ஊரடங்கிற்கு சில மாற்று வழிமுறைகளை கண்டறிந்து வெளியிட்டுள்ளனர். அதாவது கொரோனா ஊரடங்கினால் தொடர்ந்து பொருளாதாரம் சரிந்து கொண்டே வருகிறது. ஊரடங்கில் இருக்கும்போதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்கவும் அதே நேரத்தில் பொருளாதார சீர் குலைவை சரி செய்யவும் விஞ்ஞானிகள் 50/30 சுழற்சி முறை சரியாக இருக்கும் எனப் பரிந்துரை செய்கின்றனர்.
கொரோனா நோய்த்தொற்று நாளையோடு முடிந்து விடும் எனச் சொல்வதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்நிலையில் தொடர்ந்து ஊரடங்கையும் நீடிக்க முடியாது. எனவே இத்தகைய நெருக்கடி நிலைமையில் 50 நாட்களுக்கு அதிக கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை பிறப்பித்து 30 நாட்களுக்கு விதிமுறைகளில் தளர்வு செய்வதால் உலக நாடுகள் கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைப்பதோடு பொருளாதாரத்தையும் மீட்டெழுக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனை கூறிவருகின்றனர். தற்போது இந்த விதிமுறைகளைத் தான் உலகின் பெரும்பலான நாடுகள் பின்பற்றி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புதிய சுழற்சி முறையை பின்பற்றினால் இறப்பு எண்ணிக்கையும் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் எனவும் கூறப்படுகிறது.
வேலையிழிப்பு, பொருளாதார சீர்குலைவு போன்ற நெருக்கடிகளை சமாளிக்க இந்த மாற்றுவழி சரியாக இருக்கும் எனவும் வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். இந்தியா போன்ற பெரும்பலான நாடுகளில் நோய்த்தொற்று அதிகமாக இருந்தாலும் தீவிரச் சிகிச்சை தேவைப் படுவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. எனவே தனிநபர் இடைவெளி, நோய் அறிகுறி உள்ளவர்களைத் தனிமைப் படுத்துதல், தொடர்புகளை தனிமைப்படுத்தி வைத்தல், பள்ளிகளை மூடுதல் போன்ற நடைமுறைகளோடு புதிய 50/30 சுழற்சி முறையைப் பயன்படுத்தலாம் எனவும் பரிந்துரைக்கப்படுகிறது. இதுபற்றி கட்டுரை வெளியிட்டுள்ள Journal of Epodemology ஆய்விதழ் இந்தியா போன்ற நாடுகளுக்கு இந்த சுழற்சி முறை நல்ல பலனை கொடுக்கும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறது.
பொது நிகழ்வுகளுக்குத் தடைவிதித்து, உரிய பாதுகாப்புகளோடு இருக்கும்போது இந்த சுழற்சி முறையை உலக நாடுகள் பயன்படுத்தலாம். மேலும் இந்த சுழற்சி முறையைப் பயன்படுத்தக் கூடிய 16 நாடுகளிலும் 7.8 மில்லியன் மக்கள் இறந்து போவார்கள் எனவும் அந்த வல்லுநர்கள் கணிக்கின்றனர். அதோடு கொரோனா நோய்த்தொற்று குறைந்தது 200 நாட்கள் அந்நாடுகளில் நீடித்து இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 50 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு மற்றும் 30 நாட்கள் தளர்வு என விதிமுறைகள் வகுக்கும் நாடுகளில் இதுவரை கொரோனா பரவும் விகிதம் R மதிப்பு 0.8 % ஆக கணக்கிடப் பட்டுள்ளது.
50/30 ஊரடங்கு சுழற்சி முறையைப் பின்பற்றும் நாடுகளில் கொரோனா 18 மாதங்களுக்கு நீடிக்கும் எனவும் 1,30,000 மக்கள் உயிரிழக்க நேரிடும் எனவும் கூறப் படுகிறது. இந்த சுழற்சி முறையைப் பின்பற்றும்போது கொரோனா பரவும் விகிதம் R மதிப்பில் 0.5 % ஆக குறைந்து இருக்கும் எனவும் வல்லுநர்கள் கணிக்கின்றனர். இந்த மாற்று வழியைப் பின்பற்றாமல் தொடர்ந்து 3 மாதங்களுக்கு கடுமையான ஊரடங்கைப் பின்பற்றினால் கொரோனா பாதிப்பு 0 ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஆனால் நிலவும் பொருளாதாரச் சூழ்நிலையில் இம்முறையைப் பின்பற்ற முடியாது என்ற காரணத்தினால் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை தளர்த்தி வருகின்றன. ஊரடங்கை தளர்த்தாமல் தொடர்ந்து நீடிக்கும் நாடுகளில் குறைந்தது 6 மாதங்களில் கொரோனா கட்டுப் படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.
50/30 சுழற்சி முறைகளினால் சுகாதார மேம்பாடு சீர்குலைந்து போவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுகின்றனர். எனவே ஏழை மற்றும் பொருளாதாரக் குறைவுள்ள நாடுகளில் வென்டிலேட்டர் போன்ற சுவாசக் கருவிகள் மற்றும் தீவிர சிகிச்சைக்குத் தேவையான பாதுகாப்புகளை உறுதி செய்ய வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout