மது- அளவா குடிச்சா மருந்துக்குச் சமமா? ஆய்வு என்ன சொல்கிறது?
- IndiaGlitz, [Thursday,May 27 2021]
மது குடிக்கும் எங்களுக்கு எப்படி கொரோனா வரும்? எனச் சில குடிமகன்கள் கொரோனா ஊரடங்கின்போது எதிர்வாதம் எழுப்பி வருகின்றனர். இது கொரோனா நேரத்தில் மட்டும் அல்ல, அளவாக குடிச்சா எந்தத் தப்பும் இல்ல, இதுகூட ஒரு மருந்துதான், டாக்டர் கூட சொல்லி இருக்கார் என்பது போன்ற வசனங்களை நாம் அதிகமாகக் கேள்விப்பட்டு இருப்போம்.
இதனால் மதுவை அளவாக குடிக்கும்போது உடலுக்கு எந்தப் பாதிப்பும் வராதா? என்பது குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தி இருக்கிறது. அந்த ஆய்வின் முடிவில் அளவாக குடித்தால் உடலுக்கு பாதிப்பு வராது என்பது உண்மையல்ல. மேலும் ஆல்கஹால் குடிப்பதால் மூளையின் அளவு குறைகிறது. இதனால் நினைவுத் திறனுக்குப் பாதிப்பு வரலாம். அதோடு ஒயின், பீர் போன்ற மது வகைகள் பாதிப்பு ஏற்படுத்தாது எனச் சொல்வதிலும் உண்மை இல்லை எனத் தெரிவித்து உள்ளது.
இந்த ஆய்வுக்காக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் குடிக்கும் பழக்கம் கொண்ட 25,000 நபர்களின் மூளையை ஸ்கேன் செய்து இருக்கிறது. அப்படி எடுக்கப்பட்ட ஸ்கேன்களில் அவர்களின் மூளையின் அளவு குறைந்து போவதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதாவது ஆல்கஹாலை அருந்துவதால் மனித மூளையின் அளவு குறைந்து போவதாக ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
வயதாகும்போது மனித மூளை சுருங்கத்தான் செய்யும். ஆனால் ஆல்கஹாலை குடிக்கும்போது மூளையில் உள்ள சாம்பல் நிறப்பகுதி அதிகளவு குறைந்து போவதாகக் குறிப்பிட்டு உள்ளனர். இந்தச் சாம்பல் நிறப் பகுதியில்தான் மனிதனின் அனிச்சை செயல்கள் (கையைத் தூக்குவது, காலை தூக்குவது போன்ற அனிச்சையான செயல்கள்), பேசுவது, ஞாபகம் வைத்துக் கொள்வது, உணர்ச்சி வசப்படுவது என அனைத்து செயல்பாடுகளும் நடக்கின்றன.
இந்நிலையில் மது குடிக்கும் போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மூளையின் இந்த சாம்பல் நிறப்பகுதி குறைந்து போவதாக ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சி குறிப்பிடுகிறது. இப்படி ஆல்கஹாலின் மூலமாக மனித மூளையில் ஏற்படும் பாதிப்பு என்பது 0.8% எனவும் கணித்து உள்ளனர். இந்த சதவீதம் மிகக் குறைவாக தெரிந்தாலும் மனித மூளைக்கு வரும் பாதிப்புகளை ஒப்பிட்டு பார்க்கும்போது மற்றக் காரணிகளைவிட ஆல்கஹாலே மிகவும் கொடூரமாக இருக்கிறது.
அதோடு மது அருந்துவதால் தகவல் சேமிப்பு தளமான மூளையின் சாம்பல் நிறப் பகுதியின் அளவு குறைந்து போவதையும் உறுதிப்படுத்தி உள்ளனர். இதில் அளவா குடிப்பது, அதிகமாகக் குடிப்பது என்ற வித்தியாசம் இல்லாமல் மது குடிக்கும் அனைவருக்கும் இதுபோன்ற பாதிப்பு இருப்பதையும் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும் பீர், ஒயின் போன்ற குறைவான போதை தரும் பொருட்களுக்கும் இந்த விதி பொருந்துகிறது.
மேலும் முதிர்ந்த வயதில் வரக்கூடிய வியாதி, மரணத்தையும் இந்த ஆல்கஹால் வெறும் 50 வயதில் கொண்டு வந்துவிடுவதாக ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியில் தெரிவித்து உள்ளனர். அதோடு உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், அதிகமான குடிப்பழக்கம் இருப்பவர்களுக்கு இது மேலும் கேடான விஷயமாக மாறிவிடுகிறதாம். புகைப்பிடித்தலை விடவும் இந்த மது மனித மூளைக்கு கேடான ஒரு விஷயம் என அந்த ஆய்வு தெளிவுப்படுத்தி இருக்கிறது.
அதோடு இப்படி மூளையின் அளவு குறைந்து இதனால் மனித செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும்போது அதற்கு சிகிச்சை அளிக்கும் அளவிற்கு விஞ்ஞானம் இன்னும் வளரவில்லை என்று அந்த ஆய்வு அச்சுறுத்துகிறது. மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு 15-49 வயதிற்கு உட்பட்டு ஏற்பட்ட இறப்புகளில் குறைந்தது 10 இல் ஒரு இறப்பு ஆல்கஹால் மூலமாக ஏற்பட்டது என லேன்செட் அறிவியல் ஆய்விதழ் சுட்டி காட்டி இருக்கிறது.
இதனால் மது அருந்துவதில் பாதுகாப்பான அளவு என எதுவும் இல்லை. அதேபோல பாதுகாப்பான ஆல்கஹால் என்று எதுவும் இல்லை என்று ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சி தெளிவுப்படுத்தி இருக்கிறது.