சீனாவில் பிறந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று – எப்படி பரவியது என மருத்துவர்கள் குழப்பம்
- IndiaGlitz, [Thursday,February 06 2020]
சீனாவில், பிறந்து 30 மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அந்நாட்டு அரசு ஊடகம் XinhuaNet உறுதி செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவிய வுஹான் மாகாணத்தில் தான் இச்சம்பவம் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத் தக்கது.
வுஹான் மாகாணத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிப்ரவரி 2 ஆம் தேதி இந்தக் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பதற்கு முன்பே தாய்க்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்து இருந்தனர். குழந்தை பிறந்த போது 7 பவுண்டுடன் இருந்ததாகவும் தற்போது சீரான எடையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் சளி அறிகுறிகள் இல்லை. மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் எக்ஸ்ரே எடுக்கப் பட்டது. அதில் நோய்த் தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். குழந்தையின் கல்லீரல் மிகவும் பலவீனம் அடைந்துள்ளது எனவும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
பச்சிளம் குழந்தைக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து “தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவ வாய்ப்புள்ளது” என வுஹான் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாயின் வயிற்றில் இருக்கும் போதே வைரஸ் தொற்று பரவி இருக்குமா? அல்லது பிறந்தவுடன் தாய் இருமியதால் வைரஸ் தொற்று பரவியிருக்குமா? என்பது இன்னும் உறுதி செய்யப் படவில்லை.
உலக அளவில் 27,000 பேரை கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இதுவரை சீனாவை தவிர்த்த வெளி நாடுகளில் 2 இறப்பும் சீனாவில் 559 இறப்பும் பதிவு செய்யப் பட்டுள்ளன. இந்த வைரஸ் குறைந்த அளவிலேயே இளம் வயதினரைப் பாதித்துள்ள நிலையில், பிறந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சார்ஸ், மெர்ஸ் வைரஸ் பரவிய போது குறைந்த சதவீதத்தில்தான் இளம் வயதினர் பாதிக்கப் பட்டனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.